புதுடெல்லி: பிரதமர் மோடி தலையிட்டு, மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாநில முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் 10 பேர் வலியுறுத்தியுள்ளனர்.
மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து பேச, மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஜக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு, பிரதமர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி வேண்டுகோள் விடுத்தனர். அதோடு, மணிப்பூர் கலவரம் தொடர்பான கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். பிரதமர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு நேரில் சந்திக்கவும் முயன்றனர். ஆனால், முடியவில்லை.
மணிப்பூர் நிலவரம் தொடர்பாக டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று கூடி ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங் கூறியதாவது: மணிப்பூர் கடந்த 40 நாட்களாக பற்றி எரிகிறது. பலர் உயிரிழந்து விட்டனர். நிவாரண முகாம்களில் 20,000 பேர் தங்கியுள்ளனர். ஆனால், இன்று வரை இதுகுறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவே இல்லை. மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதிதானா என சந்தேகம் எழுகிறது.
இந்த விஷயத்தில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பது ஏன்? மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என விரும்புகிறோம். அதனால்தான், அவர் எங்களை சந்திப்பார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல, கடந்த 2001-ம் ஆண்டு மணிப்பூரில் வன்முறை ஏற்பட்டபோது, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசியதை மணிப்பூரை சேர்ந்த 3 மூத்த தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.
‘‘தங்கள் சொந்த கட்சி தலைவரிடம் இருந்து பிரதமர் மோடி பாடம் கற்றுக்கொண்டு, எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச வேண்டும். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.