இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி ஆயுதக் குழுவினருக்கும் கிராமங்களில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குழுக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் 50 நாட்களைக் கடந்து நீடிக்கும் வன்முறை ஓய்வதற்கான ஒரு அறிகுறியும் இல்லை என்கின்றன களநிலவரங்கள். மைத்தேயி, குக்கி இனக்குழுவினர் ஆயுதங்கள் ஏந்தி தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
– இம்பால் மேற்கு பகுதியில் திடீரென குக்கி ஆயுத குழுவினர் துப்பாக்கி சூடு நடத்தினர் .இதனையடுத்து கிராமங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த தன்னார்வலர்களும் பாதுகாப்பு படையினர் ஆதரவுடன் தாக்குதல் நடத்தினர். இந்த இருதரப்பு மோதல் சுமார் 30 நிமிடங்கள் நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
– மணிப்பூர் பற்றி எரியக் காரணமான மைத்தேயி இனக்குழுவினரை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கலாம் என்ற உத்தரவு மீது மத்திய, மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மத்திய அரசின் பதிலைப் பொறுத்தே உயர்நீதிமன்றம் அடுத்த உத்தரவை பிறப்பிக்கும் என்பதால் இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
-மணிப்பூர் பிரச்சனையில் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதை மாநிலத்தின் எந்த அரசியல் தலைவரும் விரும்பவில்லை. ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பாஜக எம்.எல்.ஏக்களே போர்க்கொடி தூக்கி டெல்லி சென்றுள்ளனர். இதேபோல மணிப்பூர் இடதுசாரி குழுவும் டெல்லி சென்றுள்ளது. ஆனால் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம் மேற்கொண்டிருப்பதால் மத்திய அரசு பிரதிநிதிகளிடம் அறிக்கைகளை கொடுத்து வருகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு அமைதி காட்டினால் டெல்லியை மையமாகக் கொண்டு போராட்டங்கள் நடைபெறக் கூடும்
– மணிப்பூரில் கடந்த மே 3-ந் தேதியன்று இணைய இணைப்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்த இணைய சேவை தடையானது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. மணிப்பூரில் வரும் 25-ந் தேதி வரை இணைய சேவைக்கான தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
– மணிப்பூரில் தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி ஆட்சியைத்தான் அமல்படுத்த வேண்டும் என்ற முழக்கம் வலுத்து வருகிறது. மணிப்பூரில் இதுவரை 10 முறை ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்துள்ளது. ஆகையால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மணிப்பூர் நேரடியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு சமூக குழுக்கள் வலியுறுத்துகின்றன. ஆனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதனை கடுமையாக எதிர்க்கின்றனர்.