இம்பால்: மணிப்பூரில் முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்று அம்மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் மோடிக்கு எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 9 பாஜக எம்எல்ஏக்கள் 5 விஷயங்களை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர். அதில், மாநில அரசு மீதும் அதன் நிர்வாகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். அதனை மீட்டெடுக்க சட்டத்தின் ஆட்சியைப் பின்பற்றி சில சிறப்பான நடவடிக்களின் மூலமாக இந்த அரசு முறையான நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டுவர வேண்டும். அதே போல மைத்தி மற்றும் குகி எம்எல்ஏக்களுக்கு இடையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
அமைதியை நிலைநிறுத்துவதற்கு மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக மத்தியப் படைகளை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும். மாநிலத்தின் ஒருமைப்பாட்டில் எந்தவித சமரசமும் செய்யப்படக்கூடாது. அதேபோல் குறிப்பிட்ட சமூகத்துக்கான தனிநிர்வாகம் என்ற வேண்டுகோள் எந்த காரணத்துக்காகவும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்தில் மைத்தி சமூகத்தைச் சேர்ந்த கரம் ஷியாம் சிங், தோக்சோம் ராதேஷ்யாம் சிங், நிஷிகன்ட் சிங் சபம், குவைராக்பம் ரகுமணி சிங், பிரோஜன் சிங், டி. ரபிந்ரோ சிங், எஸ். ரஜேன் சிங், எஸ். கேபி தேவி மற்றும் ஓய் ராதேஷ்யாம் ஆகியோர் கையெழுத்திட்டிருந்தனர்.
முதல்வர் பிரேன் சிங்குக்கு விசுவாசமான மைத்தி சமூகத்தைத் சேர்ந்த 28 பாஜக எம்எல்ஏக்கள் திங்கள்கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தனர். அதேநாளில் இந்தக் கடிதம் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளது. அப்போது சஸ்பென்சன் ஆஃப் ஆப்பரேஷனின் கீழ் குகி கிளர்ச்சி குழுக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மாநில முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அரசு தோல்வியடைந்து விட்டதாக கூறும் இந்தக்கடிதம் மணிப்பூர் மாநில பாஜகவில் ஏற்பட்டுள்ள பிளவின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடிதத்தில் கையெழுத்திட்ட 9 எம்எல்ஏக்களில் 8 பேர் ஜூன் 20ம் தேதி மற்ற தூதுக்குழுவினருடன் சேர்ந்து பாஜக தேசிய செயலாளர் பிஎல் சந்தோஷை சந்தித்தனர்.தோக்சோம் ராதேஷ்யாம் சிங் மட்டும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஏப்ரல் 13-ல் மணிப்பூர் முதல்வரின் அரசியல் ஆலோசகராக இருந்த ஹீரோக் தொகுதி பாஜக எம்எல்ஏ தோக்சோம் ராதேஷ்யாம் சிங், அப்பதவியில் இருந்து விலகினார். தொடர்ந்து ஏப்ரல் 18ல் மணிப்பூர் சுற்றுலா கழகத்தின் தலைவர் பதவியில் இருந்து லாங்தாபால் தொகுதி எம்எல்ஏ கரம் ஷியாம் தனது சுற்றுலா கழக பதவியை ராஜினாமா செய்தார். கரம் ஷியாம் எழுதிய ராஜினாமா கடிதத்தில், “மணிப்பூர் சுற்றுலா கழகத்தின் தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன், ஏனெனில் எனக்கு தலைவராக எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை” என்று கூறியிருந்தார்.
பாஜக ஆட்சி: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக சார்பில் பிரேன் சிங் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடத்தி வருகிறார்.
வன்முறை: இந்தநிலையில் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 53 சதவீதம் இருக்கும் மைத்தி சமூகத்தினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் (எஸ்டி) சேர்க்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு, பழங்குடியினர் பட்டியலில் இடம்பெற்றுள்ள குகி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. மைத்தி சமூக மக்களை பழங்குடியினர் பிரிவில் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியினர் கடந்த மே மாதம் 3-ம் தேதி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் இரு பிரிவினருக்கும் இடைய மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும்மோதலில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.