நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, அதிபர் ஜோபைடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரதமர் மோடிக்காக ஜோபைடன் டின்னர் விருந்தும் அளிக்க உள்ளார். இந்நிலையில் தான் இந்தியாவில் மதவெறுப்பு நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ள வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, அதுபற்றி ஜோபைடன், பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கட்டுரை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்கா சென்றார். நியூயார்க் நகருக்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு நியூயார்க்கில் அமைந்துள்ள ஐநா சபை தலைமை அலுவலகத்தில் நடந்த சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அடுத்ததாக அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த வேளையில் இருநாடுகளின் உறவு பற்றியும் பேச உள்ளார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியை, அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்திக்கும்போது இந்தியாவில் உள்ள ஜனநாயகம் உள்பட சில முக்கிய விஷயங்களை நிச்சயமாக விவாதிக்க வேண்டும் என பிரபல பத்திரிகையான ‛வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை போல் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனான பேச்சுவார்த்தையின்போது இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா முன்வர வேண்டும். இருப்பினும் மோடி பின்பற்றும் ஜனநாயக முறையை பற்றி பேசாமல் அமைதி காக்க முடியாது. இதனால் அதுபற்றி ஜோபைடன் நிச்சயமாக பேச வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்து தேசியவாதத்தின் கீழ் பாஜக முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இந்தியாவில் முஸ்லிம்கள் உள்பட 200 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) சிறுபான்மை மக்கள் உள்ளனர். இத்தகைய சூழலில் மதவெறுப்பு சார்ந்த வகுப்புவாத வன்முறையை கட்டுப்படுத்துவது பற்றி கட்டாயம் விவாதிக்க வேண்டும். அனைத்து மட்டங்களிலும் அங்குள்ள அரசு முஸ்லிம் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு பாகுபாடு காட்டும் வகையிலான கொள்கை முடிவுகளை கையில் எடுத்துள்ளது. சில மாநிலங்களில் முஸ்லிம் மக்களின் சொத்துகளை இடித்து அகற்றப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் இன்னும் கூட தண்டிக்கப்படாமல் உள்ளனர்.
மேலும் பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளது. பத்திரிகையாளர்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். எந்த செய்தியை அச்சிட்டு வெளியிடுவது, ஒளிபரப்புவது என்பது பற்றி நேரடி உத்தரவுகள் உள்ளதாக கூறப்படுகிறது. தங்களுக்கு எதிரான சமூக வலைதள பதிவுகளை அகற்ற முயன்றுள்ளது.
மேலும் பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்துக்கான அரசு எதிர்வினையாற்றியது. அந்த படத்துக்கு தடை விதித்ததோடு மட்டுமின்றி டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரி ஆய்வு நடத்தப்பட்டது.
பிரதமர் மோடி அரசு தங்களுக்கு எதிரான கருத்துகள் கொண்டு விமர்சனம் செய்பவர்களை நோக்கி சோதனைகளை ஏவுகிறது.
மேலும் சுதந்திரமான சிவில் சமூகத்துக்கு எதிராக செயல்படுகிறது. சமூக ஆர்வலர்கள் மீதான ஒடுக்குமுறையோடு வெளிநாடு நிதியுதவிகள் தடுக்கப்படுகிறது. இதனால் ஜோபைடன் உள்பட பிரதமர் மோடியை சந்திக்கும் தலைவர்கள் ஜனநாயகம், மனித மாண்புகள் குறித்து கட்டாயம் விவாதிக்க வேண்டும். அதோடு உலகில் வேகமாக வளரும் இந்தியாவுக்கு உள்நாட்டில் நிலவும் சவால்கள் சிக்கலை ஏற்படுத்தும் என்பதை எடுத்துரைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.