விவாகரத்து வழக்கில் மனைவிக்கு பராமரிப்புத் தொகை கொடுக்க, கணவருக்கு கோர்ட் உத்தரவிடுவது வழக்கம். ஆனால் கோர்ட் உத்தரவிட்ட பிறகும் சில கணவர்கள் ஜீவனாம்ச தொகையை மனைவிக்கு முறையாகக் கொடுப்பது கிடையாது. சிலர், பல மாதங்கள் இழுத்தடித்துக் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், ஜெய்ப்பூரை சேர்ந்த தஸ்ரத் குமாவத் என்பவரின் விவாகரத்து வழக்கு, குடும்ப நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வழக்கு நிலுவையில் இருக்கும்போது மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாய் பராமரிப்புச் செலவுக்குக் கணவர் கொடுக்கவேண்டும் என்று கோர்ட், தஸ்ரத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கடந்த 11 மாதங்களாக தஸ்ரத் தன் மனைவிக்குப் பராமரிப்பு செலவைக் கொடுக்கவில்லை.
இதனால் அவரின் மனைவி, இது தொடர்பாக குடும்ப நல நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம், பராமரிப்புச் செலவை வசூலிக்க, தஸ்ரத்தை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் கடந்த 7-ம் தேதி தஸ்ரத் கைது செய்யப்பட்டார்.
போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். தஸ்ரத் குடும்பத்தினர், அவர் தன் மனைவிக்குக் கொடுக்க வேண்டிய பராமரிப்புத் தொகையை கோர்ட்டிற்கு எடுத்து வந்தனர். அந்த பணத்தை பார்த்தவுடன் கோர்ட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியாகிவிட்டனர். அனைத்தும் நாணயங்கள்.
7 சாக்கு மூட்டைகளில் 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாகக் கட்டிக் கொண்டு வந்திருந்தனர் தஸ்ரத் குடும்பத்தினர். அவை அனைத்தும் 1, 2 ரூபாய் நாணயங்கள். அதனை பார்த்த தஸ்ரத் மனைவியின் வழக்கறிஞர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

நாணயங்களாகக் கொடுத்து மனரீதியாகத் துன்புறுத்துவதாக தெரிவித்தார். ஆனால் நாணயங்கள் சட்டபூர்வமாக ஏற்கப்பட்ட ஒன்று என்பதால் அதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தஸ்ரத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராமன் குப்தா தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பராமரிப்புத் தொகையை நாணயங்களாக தஸ்ரத் தன் மனைவிக்குக் கொடுக்க அனுமதி வழங்கினார். ஆனால் இவற்றை தலா ஆயிரம் ரூபாயாக எண்ணி, தனித்தனி பைகளில் அடைத்து, அடுத்த முறை வழக்கு விசாரணைக்கு வரும்போது கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. அதுவரை நாணயங்கள் கோர்ட் வளாகத்தில் இருக்க உத்தரவிடப்பட்டது.
துன்புறுத்த வேண்டும் என்று திட்டமிட்டு இதுபோன்று தஸ்ரத் செய்வதாக அவர் மனைவியின் வழக்கறிஞர் ராம் பிரகாஷ் தெரிவித்தார்.