பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டசபையில் மாநில காவல்துறை தலைவர் டிஜிபி நியனம முறையை மாற்றக் கூடிய அதிரடி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுவாக மாநிலங்களில் டிஜிபி நியமனம் என்பது மாநில அரசால் மேற்கொள்ளப்படுவது அல்ல. டிஜிபி பதவிக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் மாநில அரசால், யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் Union Public Service Commission-க்கு அனுப்பி வைக்கப்படும். அந்த 3 பேரில் ஒருவரை மத்திய அரசின் Union Public Service Commission, மாநில டிஜிபியாக நியமிக்கும். இதன் மூலம் மத்திய அரசு, மாநில காவல்துறையில் தமக்கு இருக்கும் அதிகாரத்தை வெளிப்படுத்தும்.
தமிழ்நாட்டில் தற்போதைய டிஜிபி சைலேந்திரபாபு பதவி காலம் ஜூன் 30-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அடுத்த டிஜிபி யார் என்பதை மத்திய அரசு பணி தேர்வாணையம் Union Public Service Commission முடிவு செய்து அறிவிக்கும். இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் அமுதா, தற்போதைய டிஜிபி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் புதிய டிஜிபி அறிவிக்கப்படுவார்.
இத்தகைய நடைமுறைக்கு எதிராக பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி அரசு குரல் கொடுத்துள்ளது. இந்த நடைமுறையை மாற்றவும் புதிய நடைமுறையை உருவாக்கவும் வலியுறுத்தி பஞ்சாப் சட்டசபையில் நேற்று அதிரடியாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அத்தீர்மானத்தில், மாநில அரசு நியமிக்கும் குழுவு, 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரை மாநில அரசுக்கு பரிந்துரைக்கும். மாநில அரசே புதிய டிஜிபி யார் என்பதை தீர்மானித்து அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அமைக்கும் குழுவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை வகிப்பார். மொத்தம் 7 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்தின் மூலம் மாநில டிஜிபிகள் நியமனத்தில் மத்திய அரசின் தலையீட்டை தவிர்க்க முடியும் என்பது பஞ்சாப் அரசின் நிலைப்பாடு.
மாநில உரிமைகள் விவகாரத்தில் முந்தும் பஞ்சாப்!