வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறையை மனிதக் கடத்தல்காரர்களின் பிடியில் இருந்து விடுவிக்க முழு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் மீதானதேவையற்ற தலையீடுகளை தடுக்கவும், சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தவும் இதன் ஊடாக வாய்ப்பு ஏற்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் இதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதியமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளதாக மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரு வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனுஷ நாணயக்கார,
நாடு வீழ்ந்த சமயத்தில் தான் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்டனர். பயங்கரவாதக் குழு இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை வீழ்ந்த இடத்திலிருந்து தூக்கி நிறுத்தினார். மக்கள் வாழக்கூடிய சூழல் நாட்டில் ஏற்படுத்தப்பட்டது. தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு அர்ப்பணித்தார். வெவ்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் நாட்டு நலனுக்காக அனைவரையும் அழைத்து ஆட்சியமைக்க நடவடிக்கை எடுத்தார். வீழ்ந்த இடத்தில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவதில் பொருளாதார சிக்கல் காணப்பட்டது. நாட்டில் டொலர் கையிருப்பு இருக்கவில்லை. நாட்டிற்கு டொலர்களை கொண்டு வருவதில் நாமும் பொறுப்பு ஏற்றோம். மூன்று லட்சத்து பன்னிரண்டாயிரம் தொழிலாளர்கள் தொழிலுக்காக வெளிநாடு சென்றனர். அதன் மூலம் இதுவரை 4800 மில்லியன் டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர முடிந்தது. வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் அதற்குப் பங்களித்தனர்.டொலர் கையிருப்பு அளவு அதிகரித்துள்ளதால் நாடு இன்று இந்த நிலையை அடைந்துள்ளது.
அன்று 80 சதவீதமாக இருந்த பணவீக்கம் இன்று 25 சதவீதமாக குறைந்துள்ளது. நாட்டு மக்கள் வாழக்கூடிய சூழலை உருவாக்க வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பங்களிப்புக்கு எமது கௌரவத்தை தெரிவிக்கிறோம். நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். நாட்டில் உற்பத்திப் பொருளாதாரம் உருவாக வேண்டும். முதலீடுகளுக்கு பல்வேறு தடைகள் இருக்கலாம். தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக உள்ளது. எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். அதற்கு, தொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை மாற்ற வேண்டும். நமது நாட்டின் தொழில் வளங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும். நாட்டிற்கு நல்ல சமூக பாதுகாப்பு கட்டமைப்பு அவசியம். சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கான சட்டமூலம் தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் முதற்கட்ட அனுமதியைப் பெற்ற பின்னர் அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.
சட்டவிரோத குடியேற்ற பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாத வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தேவையற்ற தலையீடுகள் மற்றும் தவறுகளை களைவதற்கு வெளிநாட்டு சேவை துறையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஊடாக நிதியமைச்சு தேவையான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதனை அமைச்சரவையில் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இந்த நடவடிக்கை மனிதக் கடத்தல்காரர்களின் செயல்பாடுகளை தடுக்க உதவும்.
அதேபோல், தொழிற் துறையையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி மற்றும் ஈ-சம்பள சேவை உள்ளடங்கிய டிஜிட்டல் மயமாக்களுக்குத் தேவையான கேள்விமனு நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள் முதல் மருத்துவர்கள் வரை அனைத்துத் தொழில்களுக்கு உரிய மதிப்பு கிடைக்கும் வகையில் அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் எந்த தொழிலும் பதிவு செய்யப்பட வேண்டும். நாட்சம்பளம் பெறும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.
சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதை முற்றாக நிறுத்த அவசியமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஊழியர் சேமலாப நிதியத்தை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவை அனைத்தையும் ஒன்றிணைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கட்டமைப்பொன்றினை நாம் முன்னெடுத்துச் செல்வோம். அதேபோல் “மெஹெவர பியச” வில் பல மாடிகள் வெறுமையாக கிடக்கின்றன அவற்றை முதலீட்டாளர்களுக்கு பெற்றுக் கொடுத்து வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். வெளிநாடுகளில் தொழில் புரிவோருக்கு இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி அளித்தமையால் 70% டொலர்களை நாட்டிற்குள் தக்க வைத்துக்கொள்ள முடிந்துள்ளது. உலகின் எந்தவொரு நாட்டில் தொழில் புரிந்தாலும் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி செப்டெம்பர் மாதம் வரை வழங்கப்படும். வெளிநாடுகளின் பணிபுரிவோருக்கான பல்வேறு நலன்புரித் திட்டங்கள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான தொழில் பயிற்சிகளும் இளைஞர் யுவதிகளிக்கு வழங்கப்படுகின்றன. அதற்கான முதல் அத்தியாயமாக யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி global Fair திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நாட்டில் 40 % சதவீதத்தினர் மாத்திரமே நேரடி தொழில்களை செய்கின்றனர். ஏனைய 60 % சதவீதமானவர்கள் மறைமுகமான தொழில்களையே மேற்கொள்கின்றனர். அதனால் அவர்களுக்கும் பிரவசவ பலன்கள், தொழில் அற்றுப்போகும் போதான கொடுப்பனவுகள், விபத்துக்களின் போதான கொடுப்பனவுகள் ஆகியவற்றை நிதியம் ஒன்றின் கீழ் பெற்றுக்கொடுப்பதற்கான காப்புறுதி ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நாட்டு மக்களின் பாதுகாப்பை நோக்கமாக கொண்டே கட்சி மற்றும் நிற பேதங்களை பார்க்காமல் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனால் தங்களது அரசியல் எதிர்காலம் பற்றி சிந்திக்காது பொது மக்களின் நலன் கருதிய தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும்.
ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் ஒன்றை கொண்டு வர முற்படும் போதும் போலியான சித்தரிப்புக்களை அவதானிக்க முடிகிறது. ஊடகங்களை முடக்குவதற்காக அந்த சட்டமூலத்தை கொண்டுவரவில்லை. ஊடகங்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் அரசாங்கத்திற்கு இல்லை. ஒளிபரப்புச் சட்டமூலத்தில் ஐந்து அல்லது ஆறு முக்கிய காரணிகள் உள்ளடங்கியுள்ளன. அவற்றில் அரசியலமைப்பில் உள்ளதை போன்று கருத்துரிமையை பாதுகாக்க வேண்டும் என்பதே முதன்மையான விடயமாகும். அதனால் கருத்துரிமையை பறிக்க முடியாது. உண்மையான தகவல்களை அறிந்துக்கொள்வதற்கான உரிமை மக்களுக்கு கிடைக்க வேண்டும். நாம் சுய கட்டுப்பாட்டின் கீழ் உண்மைத் தகவல்களை சமூகமயப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஒளிபரப்பு அதிகார சபையின் சட்டத் திட்டங்களையும் ஒளிப்பரப்பாளர்கள் சங்கத்தினரே தயாரிக்கப் போகிறார்கள். அரசாங்கம் தலையீடுச் செய்யாது. ஊடகங்களையோ ஊடகவியலாளர்களையோ முடக்கப்போவதில்லை. அனுமதிப் பத்திரங்களும் அவ்வண்ணமே வழங்கப்படும். எவ்வாறாயினும் அவர்களினால் வெளியிடப்படும் தகவலகளை சுயாதீன குழுவொன்றின் கீழ் தேடிப்பார்க்க வேண்டியது அவசியமாகும். கடந்த காலங்களில் சில ஊடங்களினால் ஏற்படுத்தப்பட்ட சேதங்களுக்கு மீண்டும் இடமளிக்க கூடாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்காக சேவையாற்றுகையில் சேறு பூசல்கள் அதிகம் ஏற்படலாம். நான் ஒரு போதும் எந்தவொரு மனித கடத்தல் காரர்களுடனும தொடர்புகளை பேணவில்லை. சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. நான் மனித கடத்தல்காரர்களுக்கு அடிபணிந்து செயற்பட்டிருந்தால் அதுதொடர்பில் பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கும். பாராளுமன்றத்திலும் பேசப்பட்டிருக்கும். ஆனால் அதுப்பற்றிய எவ்வித முறைப்பாடுகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. அடிப்படையற்ற செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்படுவதை தடுப்பதற்காகவே ஒளிபரப்பு அதிகார சபை சட்டமூலம் அவசியப்படுகின்றது. கடந்த காலங்களில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த பல்வேறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தடைச் செய்யப்பட்டன. நான் அவர்களுக்குச் சார்பாக செயற்பட்டிருந்தால் அவ்வாறு நடந்திருக்குமா ? அத்தோடு எவரினதும் கௌரவத்தை சிதைக்காத வகையில் ஊடகங்கள் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.