ரகசிய திருமணம் செய்தேனா?: ரகுல் பிரித் சிங் விளக்கம்
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அடுத்ததாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த ரகுல் பிரீத் சிங் இந்தியன்-2 படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் தெலுங்கிலும் கூட மிகப்பெரிய இடைவெளி விட்டுள்ள ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், அவரை காதலித்து வருவதாகவும் செய்தி வெளியானது. இதனை ரகுல் பிரித் சிங்கும் ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்து ரகுல் பிரித் சிங் அளித்துள்ள பேட்டியில், ‛பிரபலமானவர்கள் தங்கள் காதலை மறைத்து வைப்பது அவ்வளவு சுலபம் அல்ல. அதனால்தான் நான் முன்னரே சொல்லிவிட்டேன். இப்போது எனது திருமணம் பற்றி நிறைய தகவல்கள் பரவுகின்றன. நான் ரகசிய திருமணம் செய்து கொண்டேன் என்று ஏற்கனவே வதந்திகள் வந்தன. சில மாத இடைவெளிக்கு பிறகு இப்போது மீண்டும் எனக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல் பரவி உள்ளது. அந்த வகையில், எனக்கு இரண்டு முறை திருமணம் செய்து விட்டார்கள்' என்றார்.