ஸ்டாலினுக்கு முக்கியமான எதிரி நான் தான்: எஸ்.பி.வேலுமணி

திமுக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைத் தான் தற்போதைய முதல்வர் திறந்து வைத்து வருகிறார். இந்த ஆட்சி உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும். 7.5% இட ஒதுக்கீடு கொடுத்து மருத்துவ மாணவர்கள் 600- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவராக வாய்ப்பு தந்த எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என ஒட்டுமொத்த மக்களும் முடிவு செய்துள்ளார்கள்.

உச்சநீதிமன்ற உத்தரவின் படி அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை உடனடியாக மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என கூறிக்கொண்டு முதலமைச்சரின் குடும்பம் அனைவரும் செந்தில் பாலாஜி இருக்கும் மருத்துவமனையில்தான் உள்ளார்கள். அவர் ஏதேனும் கூறி விடுவாரோ என்ற பயத்தில்தான் அனைவரும் அங்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு முக்கியமான எதிரி நான் தான். கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளையும் நாங்கள் வென்றோம். அதெல்லாம் பொறுக்க முடியாமல்தான் மூன்று முறை எங்களது வீட்டில் சோதனையை நடத்தி பிறகு ஒன்றும் இல்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். தற்போது அனைத்துத் துறைகளிலும் ஊழல் நடந்து வருகிறது.

கொடநாடு பிரச்னையை வெளியில் கொண்டு வந்து நடவடிக்கை எடுத்ததே எடப்பாடியார்தான். என்னை பொருத்தவரை தனிப்பட்ட முறையில் செந்தில்பாலாஜி நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான், ஆனால் அவர் செய்த தவறுக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு உடல்நிலை நன்றாக உள்ளதா இல்லையா என்பது எனக்கு தெரியாது. மருத்துவர்களுக்குத்தான் தெரியும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு வரும்போது இன்று காலை அறுவை சிகிச்சை என உள்ளே அழைத்துச் சென்று விட்டார்கள், இதில் என்ன நடக்கும் என்று நாட்டு மக்கள் பார்த்து வருகிறார்கள். நன்றாக இருக்கக்கூடிய ஒரு மனிதரை இவ்வாறு செய்கிறார்களே என்ற வருத்தத்தில் மக்கள் உள்ளார்கள்” என தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.