Ashes 2023 First Test: இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ், இந்தாண்டு இங்கிலாந்தில் நடக்கிறது. 5 போட்டிகள் இத்தொடரில் முதல் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்பாஜ்ஸ்டன் மைதானத்தில் கடந்த ஜூன் 16ஆம் தேதி தொடங்கியது. இங்கிலாந்தின் புதிய அதிரடி பாணி ஆட்டமான பாஸ்பால் அணுகுமுறையை இந்த போட்டியிலும் பின்பற்றியது.
இருப்பினும், ஆஸ்திரேலிய அணி தனது பாரம்பரிய அணுகுமுறையையே பயன்படுத்தியது. முதல் இன்னிங்ஸில் (முதல் நாள் மூன்றாம் செஷன்) இங்கிலாந்து 393 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, அந்த அணி கேப்டன் ஸ்டோக்ஸ் இன்னிங்ஸை டிக்ளர் செய்தார். இது மிகவும் விவாதிக்கப்பட்டது. ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் ரன்களை எடுத்து வந்தபோது, அந்த நாளின் கடைசி அரைமணி நேரம் கையிலிருந்தபோது, திடீரென டிக்ளர் செய்தது நல்ல முடிவில்லை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர்.
281 ரன்கள் இலக்கு
இருப்பினும், கடைசி அரைமணி நேரத்தில் ஆஸ்திரேலியாவின் ஒரு விக்கெட்டையாவது வீழ்த்திவிட வேண்டும் என அணுகுமுறையில் இங்கிலாந்தில் களமிறங்கியது. வார்னரை, பிராட் பிடியில் சிக்கவைக்க திட்டமும் தீட்டப்பட்டது. ஆனால், இங்கிலாந்தின் அந்த முயற்சி அவர்களுக்கு பெரிதாக பலனளிக்கவில்லை என்றே கூறவேண்டும். இருப்பினும், இது ஆட்டத்தையும், ரசிகர்களையும் சுவாரஸ்யபடுத்தியது வேறு விஷயம். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 386 ரன்களை எடுத்து ஆல்-அவுட்டானது.
இதனால், இங்கிலாந்து அணி வெறும் 7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் 273 ரன்களை மட்டுமே குவித்தது. நான்காம் நாளில் 281 ரன்களை இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும், நான்காம் நாளிலியே வார்னரும், கவாஜாவும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும், வார்னர், லபுஷேன், ஸ்மித் என டாப்-ஆர்டரை ஆஸ்திரேலியா நான்காம் நாளிலேயே இழந்தது.
நம்பிக்கை அளித்த கவாஜா
ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 107 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. கவாஜா 34 ரன்களுடனும், நையிட் வாட்ச்மேனாக களமிறங்கிய போலாண்ட் 13 ரன்களுடனும் நேற்றைய ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். நேற்றும் மழை காரணமாக முதல் செஷன் ஆட்டம் முழுவதுமாக தடைபட, இரண்டாவது செஷனில் ஆட்டம் தொடங்கியது.
இதில், போலாண்ட் 20 ரன்களை எடுத்து வெளியேற ஹெட் உள்ளே வந்தார். அவரை மொயீன் அலி தனது அசத்தலான சுழற்பந்துவீச்சால் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்கச்செய்தார். சற்றுநேரம் தாக்குபிடித்த கிரீன் 28 ரன்களிலும், அரைசதம் கடந்த கவாஜா 65 ரன்களிலும் வெளியேற ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது.
போராடி வென்ற கம்மின்ஸ் – லயான் ஜோடி
227 ரன்களை எடுத்திருந்தபோது அலெக்ஸ் ஹெரியும் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 74 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கேப்டன் கம்மின்ஸ் உடன், நாதன் லயான் இருந்தார். கம்மின்ஸ் விரைவாக ரன்களை எடுக்க லயான் அவருக்கு பக்கபலமாக இருந்தார். அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து செய்த அத்தனை வியூகங்களும் பலனளிக்கவில்லை. கடைசியில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற பரபரப்பான தருணத்தில், கம்மின்ஸ் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்துவைத்தார்.
கம்மின்ஸ் 44, லயான் 16 என கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து, இங்கிலாந்தின் வெற்றியை தட்டிச்சென்றனர். 5 போட்டிகள் இத்தொடரில், ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் மிக முக்கியமான அரைசதத்தையும் அடித்து உஸ்மான் கவாஜா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஒரு வாய்ப்பாகவே பார்த்தேன்
இந்த தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டாக்ஸ், மிகவும் விவாதிக்கப்பட்ட முதல் நாளில் விரைவாகவே டிக்ளேர் செய்தது குறித்து எந்த வருத்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். விரைவாக டிக்ளர் செய்த முடிவை நினைத்து வருத்தம் கொள்கிறீர்களா என கேட்டதற்கு, “இல்லை, எந்த வருத்தமும் இல்லை, நான் அதை ஆஸ்திரேலியா மீது தாக்குதலுக்கான ஒரு வாய்ப்பாகப் பார்த்தேன். எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஒரு நாளில் 20 நிமிட ஆட்டம் மீதமுள்ள நிலையில் பேட் செய்ய விரும்புவதில்லை. யாருக்குத் தெரியும்? ஒரு வேளை ரூட்டும், ஆண்டர்சனும் அவுட்டாகியிருக்கலாம். நாங்கள் அதே நிலையில் இருந்திருப்போம்.
That winning feeling#Ashes | #WTC25 pic.twitter.com/mqz4BX7BTi
— ICC (@ICC) June 20, 2023
டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் அந்த 20 நிமிடங்களில் தப்பித்துவிட்டனர். கவாஜா ஒரு அற்புதமாக 141 (321) ரன்களை எடுத்தார். இது பார்வையாளர்களுக்கு ஆட்டத்தை அமைத்து கொடுத்தது. இருப்பினும், எங்களின் சூதாட்ட பாணியிலான அதிரடி அணுகுமுறை பலனளித்து, இங்கிலாந்து இரண்டு விக்கெட்டுகளை எடுத்திருந்தால், ஆஸ்திரேலியா 2ஆவது நாளில் பெரும் அழுத்தத்தில் இருந்திருக்கும்.
தொடர்ந்து இதையே செய்வோம்
எனது அணியைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன். 5ஆவது நாளின் கடைசி வரை சென்று கடுமையாக போராடியதற்கு… இதில் வெற்றி, தோல்வியை கணிக்க இயலவில்லை. இதுபோன்ற ஒரு போட்டியில், நான் ஒரு பகுதியாக இருந்துள்ளேன், எனக்கு மறக்க முடியாத போட்டிகளில் இதுவும் ஒன்று. நம்பிக்கையுடன், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகமானவர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் ஆஷஸ் தொடரை பின்பற்றுவதை உறுதி செய்துள்ளோம்! தோல்வி என்றால் தோல்வி தான்.
Ben Stokes won’t be taking a backward step
England’s captain says Edgbaston defeat won’t change his approach#Ashes | #WTC25https://t.co/U0XrmoIaU9
— ICC (@ICC) June 20, 2023
நாங்கள் எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதை நாங்கள் கூறியுள்ளோம். தோல்வி மற்றும் வெற்றி என்பது ஒரு சிறந்த உணர்வு. நேரம் சரியென உணர்ந்தால், இதுபோன்ற முடிவுகளின் தவறான பக்கத்தில் முடிவடைந்தால், நாங்கள் தொடர்ந்து நகர்வுகளை மேற்கொள்வோம். புகார் செய்வதற்கு அதிகம் இருக்காது.”
இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 28ம் தேதி தொடங்குகிறது.