புதுடில்லி: செந்தில் பாலாஜி மனைவி தொடுத்த ஆட்கொணர்வு மனு மீதான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதிட்டார். அவரது வாதுரையில், ‘செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்திருக்ககூடாது’ எனக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து நீதிபதி சூர்யகாந்த் கூறுகையில், ‘ஆட்கொணர்வு மனு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை, அதற்கு வாய்ப்பளிக்க வேண்டாமா? இவ்விவகாரத்தில் முன்வைக்கும் விஷயங்கள் உண்மையானாலும், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு போதுமானதாக இருக்காது. இது தொடர்பான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் வைக்கலாம்’ என்றார்.
அமலாக்கத்துறை வழக்கறிஞர் துஷாரா மேத்தா:
ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடவில்லை; இடைக்கால உத்தரவு மட்டுமே பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் காவல் கேட்டு விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளது. குல்கர்னி தீர்ப்பின் படி கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நீதிபதி சூர்யகாந்த்:
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை அறிய மருத்துவ குழுவை அமைக்க அமலாக்கத்துறைக்கு உரிமை உள்ளது. விசாரணையில் செந்தில் பாலாஜியால் பங்கேற்க முடியுமா என்பதை அறிய மருத்துவக் குழுவின் கருத்தை பெறுங்கள். மருத்துவமனையில் இருக்கும் நாட்களை முதல் 15 நாட்களுடன் சென்னை உயர்நீதிமன்றம் சேர்க்கிறதா கழிக்கிறதா என்பதை நாளை பார்ப்போம். உயர்நீதிமன்றம் எவ்வித உத்தரவை பிறப்பித்தாலும், பாதிக்கப்படுவோர் உச்சநீதிமன்றத்தை நாடும்போது அதை விசாரிப்போம்.
செந்தில் பாலாஜியின் உடல் நிலையை ஆராய மாட்டோம் என நாங்கள் தெரிவிக்கவில்லை. எந்த நிலையில் அவரது உடல் நிலையை ஆராய்வது? அனைத்து வாதங்களையும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வையுங்கள். தற்போதைய நிலையில் செந்தில் பாலாஜி வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிப்பதே சரி. அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டே உயர்நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது; அதனை சந்தேகிக்க முடியாது. பல்வேறு உத்தரவுகளை மேற்கோள் காட்டினாலும், உயர்நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் என்ன தவறு?
உயர்நீதிமன்றம் தவறாக கையாண்டிருந்தால், அதை அரசியல் சாசன விதிப்படி உச்சநீதிமன்றம் ரத்து செய்யும். மருத்துவர்கள் கருத்துப்படியே தனியார் மருத்துவமனைக்கு செந்தில்பாலாஜி மாற்றப்பட்டதாக உயர்நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளதே! மருத்துவ சிகிச்சையில் உள்ள ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க மேல்முறையீடு செய்தது அதிருப்தி அளிக்கிறது. ஆட்கொணர்வு மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவை பார்த்த பின்னர் விசாரிக்கிறோம்.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதை காரணம் காட்டி அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்க கூடாது. இவ்வாறு தெரிவித்த நீதிபதி அமலாக்கத்துறையின் மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement