Ilaiyaraaja: இளையராஜாவை இந்த விஷயத்தில் யாராலும் மாற்ற முடியாது… மனம் திறந்த பிரபலங்கள்!

சென்னை: இந்தியத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா.

இந்த மாதம் 2ம் தேதி தனது 80வது பிறந்தநாளை கொண்டாடிய இளையராஜாவுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

கடந்த சில வருடங்காளகவே அவர் குறித்து ஏராளமான சர்ச்சைகள் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், இளையராஜா பற்றி பிரபல இயக்குநர்கள் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவங்கள் தற்போது தெரிய வந்துள்ளது.

இளையராஜாவை யாராலும் மாற்ற முடியாது:இந்திய திரையிசை ஜாம்பவான்களில் ஒருவர் இசைஞானி இளையராஜா. 1980களில் தொடங்கிய ராஜாவின் இசைப் பயணம் இப்போது பெரும் சமுத்திரமாக விரிந்து கிடக்கிறது. கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை படத்தில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றன.

அதேபோல் சில தினங்களுக்கு முன் அமேசான் ப்ரைமில் வெளியான மார்டன் லவ் சென்னை ஆந்தாலஜி தொடரிலும் இளையராஜாவின் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனிடையே இளையராஜா குறித்து அடிக்கடி சர்ச்சையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. அதில், அவரது கோபம், பிடிவாதம், ரெக்கார்டிங்கின் போது நடந்த சில சம்பங்கள் பற்றியும் தகவல்கள் வெளியாகின்றன.

ஆனால், ஆரம்ப காலத்தில் இளையராஜாவுடன் பணியாற்றிய பிரபல இயக்குநர்கள் அவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளனர். பி வாசு இயக்கிய முதல் படமான பன்னீர் புஷ்பங்கள் 1981ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்திற்காக இளையராஜாவிடம் சம்பளம் குறித்து கேட்டுள்ளார் பி வாசு. ஆனால் அவரோ “இதுதான்யா முதல் படம், ஃபர்ஸ்ட் இது ஹிட்டாகட்டும், அப்புறம் சேர்ந்து இன்னும் நிறைய படங்கள் பண்ணலாம், அதுவரை சம்பளம் பத்திலாம் யோசிக்க வேண்டாம்” எனக் கூறிவிட்டாராம்.

இதேபோல் தான் தனக்கும் நடந்தது என மறைந்த இயக்குநரும் நடிகருமான மனோபாலா கூறியுள்ளார். மனோபாலாவின் முதல் படமான ஆகாய கங்கை 1982ல் வெளியானது. இந்தப் படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார். பல சோதனைகளுக்கு நடுவில் தான் ஆகாய கங்கை படம் இயக்கும் வாய்ப்பு மனோபாலவுக்கு கிடைத்துள்ளது. இதனால், அவருக்கும் முதல் படம் என காரணம் சொல்லி சம்பளம் வாங்க மறுத்துவிட்டாராம் ராஜா.

முக்கியமாக இளையராஜா குறித்து மறைந்த இயக்குநரும் நடிகருமான மணிவண்ணனும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். தனது சினிமா கேரியரில் முக்கியமான நபர் இளையராஜா தான். அவர் இசையமைக்கவில்லை என்றால் தான் இயக்கிய படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்திருக்காது. தனது முதல் படத்திற்கு சம்பளமே வாங்காத இளையராஜா, இன்னும் சில படங்களுக்கு குறைவான சம்பளவே வாங்கினார் எனக் கூறியுள்ளார்.

அதேபோல், பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சங்கிலி முருகனும் இளையராஜா குறித்து மனம் திறந்துள்ளார். நான் படம் தயாரிக்கிறேன் என சொன்னதும், “என்ன அண்ணா நீங்களும் இந்த முடிவுக்கு வந்துட்டீங்க” என ஆச்சரியமாக கேட்டராம் இளையராஜா. அதுமட்டும் இல்லாமல் “உங்க படத்துக்கு சம்பளம் வாங்கினா அது குத்தமாகிவிடும்” எனக் கூறி, சங்கிலி முருகன் தயாரித்த முதல் இரண்டு படங்களுக்கும் இளையராஜா சம்பளம் வாங்கவில்லையாம். இந்த பிரபலங்கள் பேசிய வீடியோவை இளையராஜா ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.