சென்னை: அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது.
விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், கடந்த வாரம் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது.
ஆனாலும் ஆதிபுருஷை விடவும் பாக்ஸ் ஆபிஸில் போர் தொழில் படத்துக்கு தரமான வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தொடரும் போர் தொழில் வசூல் வேட்டை: அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு நடித்துள்ள போர் தொழில் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியானது. விக்னேஷ் ராஜா இயக்கிய இந்தப் படம் ஹாரர் பிளஸ் சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. மினிமம் பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான போர் தொழில் தாறுமாறாக சம்பவம் செய்துள்ளது.
முதல் நாளில் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வசூலித்த இந்த படம், முதல் வார இறுதியில் 6 கோடி வரை கலெக்ஷன் செய்தது. அதற்கடுத்த நாட்களிலும் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 1 கோடி வரை வசூலித்தது. இதனிடையே படக்குழுவினரும் போர் தொழில் சக்சஸ் பார்ட்டியை கேக் வெட்டி கொண்டாடினர். சென்னை வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற போர் தொழில் சக்சஸ் மீட்டில், சரத்குமார், அசோக் செல்வன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், கடந்த வாரம் 16ம் தேதி பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது. 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான ஆதிபுருஷ், இந்தி, தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியானது. இந்தப் படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ஆஞ்சநேயருக்காக ஒரு சீட் ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் மொத்த இருக்கைகளும் ஆஞ்சநேயருக்காக ஒதுக்கப்பட்டுவிட்டதாக ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.
ஏனெனில், பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துக்கு தமிழ்நாட்டில் சுத்தமாக வரவேற்பே இல்லை. என்னதான் பிரபாஸ் பான் இந்தியா சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவரின் ஆதிபுருஷ் தமிழ்நாட்டில் செல்ஃப் எடுக்காமல் பிரேக் டவுன் ஆனது. இந்தியிலும் தெலுங்கிலும் மட்டுமே ஓரளவு வரவேற்புப் பெற்ற ஆதிபுருஷ், இதுவரை 375 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாம்.
ஆனால், தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் சுத்தமாக படுத்தேவிட்டது ஆதிபுருஷ். இதனால், கடந்த வாரமும் போர் தொழில் படத்தின் வசூல் மாஸ் காட்டியுள்ளது. பிரபாஸின் ஆதிபுருஷ் இதுவரை தமிழ்நாட்டில் ஒன்று அல்லது இரண்டு கோடி மட்டுமே வசூலித்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஆதிபுருஷ் வெளியான பின்னரும் போர் தொழில் திரைப்படம் சுமார் 10 கோடி வரை வசூலித்துள்ளதாம். அதன்படி போர் தொழில் திரைப்படம் இதுவரை 30 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.