சென்னை: Pradeep Kumar (பிரதீப் குமார்) பாடகர் பிரதீப் குமார் ஈரோட்டில் நடத்தும் இசைக்கச்சேரி தொடர்பான முழு விவரமும் வெளியாகியிருக்கிறது.
திருச்சியை பூர்வீகமாகக் கொண்டவர் பாடகர் பிரதீப் குமார். சிறு வயதிலிருந்தே இசை மீது ஆர்வம் உடையவர் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக அறிமுகமான அட்டக்கத்தி படத்தில் ஆசை ஒரு புல்வெளி என்ற பாடலின் மூலம் கோலிவுட்டில் பாடகராக குரல் பதித்தார். 2012ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தியை பார்த்த ரசிகர்கள் ஆசை ஒரு புல்வெளியை தொடர்ந்து முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
மோகத்திரை: அதே வருடம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படத்திலும் சந்தோஷ் நாராயணன் இசையில் மோகத்திரை பாடலை பாடினார். அந்தப் பாடலில் மோகத்திரை மூன்றாம் பிறை மூங்கில் மரம் முத்தம் தரும் என அவர் பாடியதை கேட்ட ரசிகர்கள் அவரது குரலுக்கு முத்தம் தர வேண்டும் என ஏங்கினர். சந்தோஷ் நாராயணன் போட்டிருந்த மெலோடி இசையை மேற்கொண்டு மென்மையாக்கி ஒரு ரம்யத்தை நிகழ்த்தினார் பிரதீப்.
முன்னணி பாடகர்: அதனையடுத்து ஆகாசத்த நான் பார்க்குறேன், காதல் கனவே, ஆகாயம் தீ பிடிச்சா, பூ அவிழும் பொழுதில், மாய நதி, நீ கவிதைகளா போன்ற பாடல்களை பாடி பட்டித்தொட்டியெங்கும் ஒலித்தார் பிரதீப். குறிப்பாக கபாலி படத்தில் அவர் பாடிய மாய நதி பாடலை இப்போது கேட்டாலும் ரசிகர்கள் அப்படியே தங்களது வேலையை மறந்து நின்றுவிடும் மாயாஜாலத்தை விதைத்தார்.
லைஃப் ஆப் ராம், தலை கோதும் இளங்காத்து: தொடர்ந்து பல பாடல்களை பாடிவரும் பிரதீப்பின் கரியரில் 96 படத்தில் இடம்பெற்ற லைஃப் ஆஃப் ராம் பாடலும், ஜெய் பீம் படத்தில் இடம்பெற்ற தலை கோதும் இளங்காத்து பாடல்களும் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தவை. அவரது குரலுக்கு ஏற்கனவே பலரும் ரசிகர்களாக இருந்த சூழலில் இந்த இரண்டு பாடல்களும் மேற்கொண்டு அவருக்கு ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.
இசை கச்சேரி: தொடர்ந்து பல பாடல்களை பாடுவதில் பிஸியாக இருக்கும் பிரதீப் குமார் இசை கச்சேரி நடத்துவதிலும் படு பிஸியாக இருந்துவருகிறார். பல இடங்களில் இசைக்கச்சேரி நடத்திவரும் அவர் தற்போது ஈரோட்டிலும் நடத்தவுள்ளார். ஜூன் 24 ஆம் தேதி ஈரோட்டில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் வில்லேஜ், வில்லரம்பட்டி மைதானத்தில் மாலை ஏழு மணி அளவில் பிரமாண்டமாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
என்னென்ன அம்சங்கள்: மொத்தம் மூன்று மணி நேரம் நடைபெறவிருக்கும் இந்த இசைக்கச்சேரிக்காக வெளிநாடுகளில் இருந்து சவுண்ட் சிஸ்டம், லைட் சிஸ்டம் உள்ளிட்டவைகள் வரவழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல்இந்தக் கச்சேரியில் பிரதீப் குமாருடன் மொத்தம் 9 பேர் கலந்துகொள்ளவிருக்கின்றனர். எப்போதும் பிரதீப் குமாரின் இசைக்கச்சேரிக்கு பலத்த வரவேற்பு இருக்கும் என்பதால் இந்த இசைக்கச்சேரிக்கும் ஏராளமான ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இசைக்கச்சேரியானது V2 கிரியேஷன்ஸ் & ஈரோடு 360, ஆனந்த் வெஸ்ட்ஸ் அண்ட் ப்ரீஃப்ஸ், அகஸ்தியா அகாடமி, சென்னிஸ் மற்றும் போடரன் ஆகியோரால் வழங்கப்படுகிறது.