புதுடில்லி : தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்த அமலாக்கத் துறையின் வழக்கில், எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருவதால், அங்கே முறையிடுமாறு உத்தரவிட்டுள்ளது.
வேலை வாங்கித் தருவதாக பணம் வசூலித்து மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத் துறை விசாரணை நடத்தி, அவரை கைது செய்துள்ளது.
நெஞ்சு வலி ஏற்பட்டதால், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், பின்னர் உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியை தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆட்கொணர்வு மனு
‘கைது நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை’ என, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை ஏற்றுள்ள, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, இன்று விசாரணை நடத்த உள்ளது.
இந்நிலையில், அமலாக்கத் துறை சார்பில், தனியார் மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற அனுமதித்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், மருத்துவர்களின் முன்அனுமதியை பெற்ற பின்னரே அவரை விசாரிக்க வேண்டும் என்று சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில், இரு வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள், நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:
அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலிலும், அமலாக்கத் துறை காவலிலும் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் எவ்வாறு விசாரிக்க முடியும்?
அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு அனுமதி அளித்ததும் ஏற்புடையதல்ல; இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.
கைது செய்த முதல் நாளில் இருந்தே, அவர் மருத்துவமனையில் உள்ளார். அதனால், மருத்துவமனையில் அவர் உள்ள காலத்தை, நீதிமன்றம் அல்லது அமலாக்கத் துறை காவலில் உள்ளதாக கருதக் கூடாது.இது, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோருவதில், எங்களுக்கு பின்னர் தடையாக இருக்கும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.
மேல் முறையீடு
செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய மனைவி சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் என்.கே.கவுல் வாதிடுகையில், ”ஒருவர் செயற்கையாக எப்படி இதய அடைப்பை உருவாக்கி கொள்ள முடியும்? அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
”இந்நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை விசாரணை கோருவது துரதிருஷ்டவசமானது,” என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதனால், தற்போதைய நிலையில் எந்த ஒரு உத்தரவையும், இதில் பிறப்பிக்க முடியாது. இது விசாரணையின் போக்கை மாற்றி விடும்.
ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு ஏற்புடையதா என்பது குறித்து விசாரிக்க உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. உயர் நீதிமன்றங்களும் அரசியல் சாசன சட்ட அமைப்புகளே. அவற்றின் திறன், திறமை குறித்து, எந்த சந்தேகமும் தேவையில்லை.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி, உத்தரவுகள் பிறப்பிக்கும் வரை காத்திருப்போம். அதுவரை, இந்த மனுக்கள் மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்படுகிறது.
உயர் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவை எதிர்த்து, ஏதாவது ஒரு தரப்பு நிச்சயம் மேல்முறையீடு செய்யும்; அப்போது இதுகுறித்து விரிவாக விசாரிப்போம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை, ஜூலை 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
கண்டக்டர்களுக்கு ‘சம்மன்’
அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து, டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கிய நபர்களிடம் விசாரிக்க, அமலாக்கத் துறை அழைப்பு விடுத்துள்ளது.செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் நடந்த சோதனையில், அரசு வேலை கேட்டு அணுகிய 6,000 பேரின் விபரங்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.அதில், சிவகாசியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் வாயிலாக, 300 பேருக்கு, டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் பணிகள் வாங்கி தரப்பட்டுள்ளன. இவர்கள், மாரியப்பன் வாயிலாக, செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் உள்ளிட்டோருக்கு, தலா, 2 – 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளனர். அதற்கான ஆவணங்களையும், அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியிடம் பணம் கொடுத்து வேலை வாங்கி, தற்போது பணியில் உள்ள டிரைவர், கண்டக்டர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்டோரிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற உள்ளனர். இதற்காக சிலருக்கு, ‘சம்மன்’ அனுப்பி உள்ளனர்.
‘பைபாஸ் ஆப்பரேஷனில்’ 4 அடைப்புகள் நீக்கம்!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதய ரத்த நாளங்களில் இருந்த நான்கு அடைப்புகள், நேற்று நடந்த அறுவை சிகிச்சையில் நீக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் நான்கு அடைப்புகள் இருப்பதை கண்டறிந்துள்ளதாகவும், அவற்றை நீக்க, ‘பைபாஸ்’ அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்றும் டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
அதன்படி அவருக்கு, இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர், நேற்று காலை 5:15 மணி முதல் 10:00 மணி வரை அறுவை சிகிச்சை செய்தனர்.இதுகுறித்து, மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:அமைச்சர் செந்தில் பாலாஜியின் இதயத்தில், அடைப்பு கொண்ட ரத்த நாளங்களுக்கு மாற்றாக, வேறு குழாய்கள் பொருத்தி, ரத்த ஓட்டத்தை சரி செய்துள்ளோம். தற்போது, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். பல்துறை மருத்துவக் குழுவினர், அவரது உடல் நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, செந்தில் பாலாஜி தொடர்ந்து ஒரு வாரம் வரை, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என்றும், அதன் பின், இரண்டு வாரம் முதல் ஒரு மாதம் வரை கட்டாய ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்