சென்னை: சூர்யா தற்போது கங்குவா படத்திலும், அவரது தம்பி கார்த்தி ஜப்பான் படத்திலும் நடித்து வருகின்றனர்.
இதில் கார்த்தியின் ஜப்பான் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார் கார்த்தி.
கைதி 2ம் பாகத்தில் ரோலக்ஸ் கேரக்டரும் இடம்பெறும் என சொல்லப்பட்ட நிலையில், சூர்யா, கார்த்தி இருவரும் ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் ரோலக்ஸ் – டில்லி
சூர்யா நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் கங்குவா. ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். 3டி டெக்னாலஜியில் 10 மொழிகளில் வெளியாகவுள்ள கங்குவா, தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு தொடங்கிய கங்குவா படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாம். கோவாவில் தொடங்கி இலங்கை உட்பட பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார் சிறுத்தை சிவா. கங்குவா படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், விடுதலை 2ம் பாகத்தின் சில காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட்டுவருவதால், வாடிவாசல் இப்போது தொடங்க வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வரும் கார்த்தி, அடுத்ததாக கைதி 2ம் பாகத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்தப் படம் தான் LCU கான்செப்ட் உருவாக காரணமாக அமைந்தது. அதனால், கைதி 2 படத்திற்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேபோல், கைதி 2வில் ரோலக்ஸ் கேரக்டர் கண்டிப்பாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிப்பதை பார்க்க ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதிலும் கைதி 2வில் டில்லி – ரோலக்ஸ் இருவரும் மோதினால் அதிரிபுதிரியாக இருக்கும் என சொல்லத்தேவையே இல்லை. இந்நிலையில், சூர்யா, கார்த்தி இருவருமே சென்னை ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறும் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கின்றனர். ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா – கார்த்தி இருவரும் நடித்து வருவதால், இது கைதி 2வின் ப்ரோமோஷனா என எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், சூர்யா தனது கங்குவா படத்திற்காகவும், கார்த்தி ஜப்பான் படத்திலும் நடித்து வருகின்றனர் என சொல்லப்படுகிறது. கங்குவா, ஜப்பான் இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெறுவதால் சூர்யாவும் கார்த்தியும் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். கங்குவா படத்திற்காக கேரளாவில் இருந்து களரி சண்டை கலைஞர்களை வரவைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறதாம். அதேபோல், ஜப்பான் படத்திற்காகவும் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி எடுக்கப்பட்டு வருகிறதாம். இதற்காக சூர்யாவும் கார்த்தியும் ஒரே ஷூட்டிங் ஸ்பாட்டில் வலம் வருகின்றார்களாம்.