சென்னை: Vijay Birthday (விஜய் பிறந்தநாள்) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கமலா, ரோஹினி உள்ளிட்ட திரையரங்குகளில் விஜய் படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.
தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக திகழ்ந்துவருகிறார் விஜய். அவரது படங்கள் அசால்ட்டாக நூறு கோடி ரூபாயை தாண்டி வசூலித்துவருகின்றன. இதன் காரணமாக விஜய்யை நம்பி எவ்வளவு வேண்டுமானாலும் பட்ஜெட் போடலாம் என்ற எண்ணம் தயாரிப்பாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. அவர் தற்போது நடித்துவரும் லியோ படம்கூட 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பட்ஜெட்டில் உருவாகிவருவதாக கூறப்படுகிறது.
லியோ: பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசு படத்துக்கு கலவையான விமர்சனத்தால் விஜய் நிறையவே அப்செட்டாகியிருக்கிறார். எனவே விட்டதை பிடிக்க லியோ படத்தை அவர் எதிர்பார்த்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் பாலிவுட்,கோலிவுட், மல்லுவுட்டை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் களமிறங்கியிருக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் பிஸ்னெஸ்ஸும் இதுவரை 400 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: விஜய் நாளை தனது 49ஆவது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையொட்டி லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும் நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதுதொடர்பான ப்ரோமோவும் வெளியாகியிருக்கிறது. விஜய் பாடியிருக்கும் அந்தப் பாடலின் நான்கு வரிகளை கேட்ட ரசிகர்கள் அதனை கொண்டாடிவருகின்றனர். மேலும் இது எல்சியூவில் வருவது உறுதி என்றும் ஆரூடம் கூறிவருகின்றனர்.
ஃபர்ஸ்ட் லுக்: பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாவதோடு அப்டேட்டுகள் நின்றுவிடுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது. அதனை போக்கும் விதமாக லோகேஷ் கனகராஜ் இன்று மாலை ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் அறிவித்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுத்திருக்கிறார். இப்படி ஒருபக்கம் விஜய் ரசிகர்களுக்கு லியோ படக்குழு ட்ரீட் கொடுக்க மறுபக்கம் திரையரங்குகளும் ட்ரீட் கொடுக்க தயாராகி இருக்கின்றன.
திரையரங்குகளின் ட்ரீட்: அதன்படி, பல திரையரங்குகளில் நாளை விஜய் பிறந்தநாள் என்பதால் அவர் நடித்த திருமலை, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி, மெர்சல், பிகில், மாஸ்டர் உள்லிட்ட படங்கள் சிறப்பு காட்சிகளாக திரையிடப்படவிருக்கின்றன. அதேபோல் சென்னையில் பிரபல திரையரங்குகளாக விளங்கும் கமலா மற்றும் ரோஹினி திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் விஜய்யின் திரைப்படங்களை திரையிட திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர்.
விஜய்யின் பாதையை மாற்றிய படங்கள்: விஜய் இப்போது மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோ. இந்தப் பாதையில் அவரை ராஜபாட்டை நடத்த வைத்தது என்றால் திருமலை, திருப்பாச்சி, போக்கிரி உள்ளிட்ட படங்கள் அடங்கும். குறிப்பாக திருமலை படத்தில் நடித்த பிறகுதான் விஜய் முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.