மும்பை: அமுல் சிறுமியை வடிவமைத்த சில்வெஸ்டர் டா குன்ஹா காலமானார். 80 வயதைக் கடந்த அவர், உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சில்வெஸ்டர் டா குன்ஹா மரணம் குறித்து அமுல் நிறுவனத்தின் குஜராத் சந்தைப்படுத்தல் மேலாளரான பவன் சிங் கூறும்போது, “குன்ஹா இந்திய விளம்பர உலகின் லெஜண்ட். உலகின் மிக நீண்ட தொடர்ச்சியான விளம்பர பிரச்சாரங்களில் ஒன்றை வடிவமைத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் நிறுவன முன்னாள், இன்னாள் அதிகாரிகளும், சசி தரூர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சில்வெஸ்டர் டா குன்ஹா இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமுல் சிறுமி உருவான கதை: இந்திய அளவில் பிரபலமாக உள்ள அமுல் பால் உற்பத்தி நிறுவனம், குஜராத்தை மையாக கொண்டு செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் பால் சார்ந்த பொருட்களை மக்களிடம் பிரபலப்படுத்த அந்நிறுவனம் 60-களில் அப்போது விளம்பரத் துறையில் பிரபலமாக இருந்த ஏஎஸ்பி விளம்பர ஏஜென்சியை அணுகுகிறது. சில்வெஸ்டர் டா குன்ஹாதான் அந்த நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.
அந்த வகையில் விளம்பரத் துறையில் குருவாக இருந்த சில்வெஸ்டர் குன்ஹா 1966-ஆம் ஆண்டு அமுலை விளம்பரப்படுத்தும் முயற்சியில்தான் அமுல் சிறுமி என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார். முதன்முதலில் அமுல் நிறுவனத்தின் வெண்ணெய் தயாரிப்பு பொருட்களில்தான் அமுல் சிறுமி இடம்பெற்றார்.
நாளடைவில் அமுலின் அடையாளமாகவே அந்த சிறுமி அறியப்பட்டார். மேலும், இந்திய – உலகளவில் நிகழும் முக்கிய நிகழ்வு நடந்தால் அதனை அச்சிறுமி வாயிலாக மக்களுக்கு அறிவிக்கும் உத்தியை சில்வெஸ்டர் குன்ஹா கையாண்டார். இந்த முயற்சிக்கும் பெறும் வரவேற்பு கிடைத்தது.