`ஆணாக மாற விரும்புகிறேன், விரைவில் ஆபரேஷன்!’ – மேற்குவங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் மகள் அறிவிப்பு

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாரியாவின் மகள், சுசேதனா பட்டாச்சாரியா. 41 வயதாகும் இவர், திருநங்கைகள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்து வருகிறார். சமீபத்தில் சுசேதனா ஓரின சேர்க்கையாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதை, ஓரின சேர்க்கையாளர்கள் நல ஆர்வலர் சுப்ரவா ராய் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் கூட்டத்தில் சுசேதனா தன்னை திருநம்பியாக அறிவித்துக்கொண்டதாகவும், பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தனது பெயரை சுசேதன் என்று மாற்றிக்கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனை சுசேதனாவும் உறுதிபடுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என்று நான் தனிப்பட்ட முறையில் முடிவு எடுத்துள்ளேன். எனக்கு 41 வயதாகிவிட்டதால் எனது வாழ்க்கை தொடர்பான அனைத்து முடிவுகளையும் என்னால் சுயமாக எடுக்க முடியும். அந்த வகையில் தான் இம்முடிவை எடுத்துள்ளேன். தயவு செய்து இதில் என் பெற்றோரை உள்ளே இழுக்காதீர்கள்.

யார் ஒருவர் தன்னை மனரீதியாக ஆணாக நினைக்கிறாரோ அவர் ஆடவர் ஆவார். நானும் மனரீதியாக ஆடவராகவே என்னை உணர்கிறேன். எனவே உடல் ரீதியாகவும் அவ்வாறே மாற விரும்புகிறேன். எனது தனிப்பட்ட அடையாளத்தை என் குடும்பத்தோடு கலக்காதீர்கள். அறுவை சிகிச்சைக்கு சட்ட ஆலோசனை பெறப்பட்டுள்ளது. என் அடையாளம் என் தந்தைக்கு தெரியும். அதனால் எனது முடிவுக்கு ஆதரவாகவே இருக்கிறார். இந்தச் செய்தியை மீடியா பெரிதுபடுத்த வேண்டாம்’’ என்று தெரிவித்தார்.

நடிகை உஷாஷி பட்டாச்சாரியா, சுசேதனாவின் முடிவை வரவேற்று இருக்கிறார். சுசேதனாவின் இந்த முடிவு, இந்தச் சூழலில் இருக்கும் பலருக்கு அச்சம் விலக்கி, இந்த மாற்றம் குறித்து பேச வைக்கும் என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.