சென்னை கிண்டியில் உயர்கல்வி தொடர்பாக FICCI சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இதில் மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆவினில் கடந்த ஏப்ரல் மாதம் நாளொன்றுக்கு கிடைத்த சராசரி 27.80 லட்சம் லிட்டர்.
பால் கொள்முதல் உயர்வு
பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்றைய தேதியில் 30.80 லட்சம் லிட்டரை எட்டியுள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சியை காட்டுகிறது. விவசாயிகள் அளிக்கும் பாலிற்கு உடனடியாக தரத்தை ஆய்வு செய்து விலை நிர்ணயிக்கப்பட்டு ரசீது வழங்கப்படும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
நெருக்கடி நிலை மாறியது
விவசாயிகள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். கூடிய விரைவில் ஆவின் மிகச்சிறந்த நிறுவனமாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசுகையில், நெருக்கடியான நிலையில் இருந்து இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். கொள்முதல் மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் தேவை அதிகமாக காணப்பட்டது.
இனிமே பிரச்சினையில்லை
இதை சரிசெய்வதற்கு உரிய நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டன. இதன் பலனாக பால் கொள்முதலும், விநியோகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் மட்டும் எடுத்து கொண்டால் 80 ஆயிரம் லிட்டர் அதிகரித்துள்ளது. எனவே பால் கொள்முதல் மற்றும் விநியோகம் ஆகிய சங்கிலி தொடர்களில் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும் எனக் கூறினார்.
அம்பத்தூரில் ஆராய்ச்சி நிலையம்
ஆவின் குடிநீர் தொடர்பான கேள்விக்கு, அது ஒருபக்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். முதலில் பால் பொருட்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கவுள்ளோம். அம்பத்தூரில் 12 கோடி ரூபாய் மதிப்பில் ஆராய்ச்சி நிலையம் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ள மையமாக திகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.