வாஷிங்டன்: பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்துள்ளார். நேற்றைய தினம் மின்வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் சிஇஓ எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.
எலான் மஸ்க் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது என்றும் ஆன்மீகம் முதல் எரிசக்தி வரையில் பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடினோம் என்றும் மோடி தன் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க் கூறுகையில், “நான் மோடியின் ரசிகன். அவர் இந்தியா மீது உண்மையில் பெரும் அக்கறை கொண்டுள்ளார். இந்தியாவில் முதலீடுகளைப் பெருக்க அவர் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மின்வாகனத் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டெஸ்லா உள்ளது. டெஸ்லா நிறுவனம் அதன் கார்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வந்தது. ஆனால், மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிக வரிவிதிக்கும் நிலையில், இந்த வரியைக் குறைக்கும்படி டெஸ்லா நிறுவனம் இந்தியாவிடம் கோரிக்கை வைத்தது. அதற்கு மத்திய அரசு உடன்படவில்லை. டெஸ்லா நிறுவனம் இந்தியாவிலேயே ஆலை திறக்கும்பட்சத்தில், அதற்கான சிறப்பு வசதிகளை ஏற்பாடு செய்து தருவதாக மத்திய அரசு குறிப்பிட்டது.
இந்நிலையில், பிரதமர் மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு எலான் மஸ்க், உலகின் மற்ற பெரிய நாடுகளைவிடவும் இந்தியாநம்பிக்கைக்குரியதாக திகழ்கிறது என்றும் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அதிக முதலீடு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தாக தெரிவித்த எலான் மஸ்க், அடுத்தஆண்டு இந்தியா வர திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டார்.