என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்! கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் போட்ட அன்புக்கட்டளை!

மயிலாடுதுறை: தன்னை சின்னவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

தனக்கு தனது தாத்தா கருணாநிதி வைத்த பெயரான உதயநிதி என்றே அழைக்கலாம் எனவும் அடைமொழியிட்டு அழைப்பதை தாம் விரும்பவில்லை எனவும் மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சின்னம்மா என்றழைக்கப்பட்ட சசிகலா கடைசியில் அரசியலில் இருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ள சூழலில் உதயநிதி விடுத்த வேண்டுகோள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்ட போது, சினிமாவில் நடிக்கும் இவர் கட்சி பணிகளுக்கு சரிபட்டு வருவாரா என பல சீனியர் நிர்வாகிகள் தங்களுக்குள் விவாதம் நடத்தினர். ஆனால் அவர்களின் மனக்கணக்குகளை எல்லாம் தவிடு பொடியாக்கி திமுக இளைஞரணியில் லட்சக்கணக்கில் புதிய இளைஞர்களை சேர்த்து கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினார்.

உதயநிதி ஸ்டாலினை பொறுத்தவரை இயல்பாகவே கூச்ச சுபாவம் உடையவர். ஆனால் அப்படிபட்ட நபர் தன்னை நம்பி மிகப்பெரிய பொறுப்பு கொடுத்திருப்பதை உணர்ந்து பொது இடங்களில் பேசும் திறனை வளர்த்துக்கொண்டார். நகைச்சுவை ததும்ப மேடையில் பேசுவது கருணாநிதியின் பாணி. அதனை கணக்கச்சிதமாக பின்பற்றத் தொடங்கினார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலினை அவரது ரசிகர் மன்றத்தினரும், இளைஞரணியினரும் ஆர்வக்கோளாறில் சின்னவர் என்ற அடைமொழியில் ஆரம்பத்தில் அழைக்கத் தொடங்கினர். ஆனால் தனக்கு எந்த அடைமொழியும் வேண்டாம் என்றும், பட்டப்பெயர்களை தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தியிருந்ததால் சில மாதங்கள் அப்படி அழைக்கப்படாமல் இருந்தார்.

தற்போது மீண்டும் உதயநிதி ஸ்டாலினை சின்னவர் என்ற அடைமொழியுடன் கட்சியினர் அழைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இது அவருக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியிருக்கிறது. இதனால் தான் மயிலாடுதுறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தன்னை சின்னவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என மீண்டும் ஒரு அன்புக்கட்டளை போட்டுள்ளார்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.