நியூஃபவுண்ட்லேண்ட்: இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912-ம் ஆண்டு, தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கப்பல் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கிறது. இந்த கப்பல் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது.
இதனால் நீர்மூழ்கியில் சென்று, ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் மேற்கொண்டது. இதற்காக 21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கி தயாரிக்கப்பட்டது. இது கடலில் 13,000 அடி ஆழம் வரை செல்லும் திறன் படைத்தது. இதில் ஒரு பைலட் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதில் செல்ல ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டணம்.
இந்த நீர்மூழ்கி கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது. இதை பைலட் ஸ்டாக்டன் ரஷ் இயக்கினார். இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த 58 வயது கோடீஸ்வரர் ஹாமிஸ் ஷார்டிங், பாகிஸ்தானைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் இருவர், மற்றும் டைட்டானிக் நிபுணர் ஒருவரும் பயணம் செய்தனர்.
இந்த நீர்மூழ்கி புறப்பட்ட 1 மணி நேரம் 45வது நிமிடத்தில் அதன் தகவல் தொடர்பு துண்டானது. இந்த நீர்மூழ்கியில் 4 நாள் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் மட்டுமே உள்ளது. இது கடலுக்குள் 96 மணி நேரம் இருக்கும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் இன்று காலை வரைதான் ஆக்ஸிஜன் இருக்கும். அதனால், இந்த நீர்மூழ்கியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் கப்பல்கள், விமானங்கள் இந்த நீர்மூழ்கியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஆழ்கடல் பகுதியில் சத்தம் கேட்டதை கனடாவின் கண்காணிப்புவிமானம் பி-3 நேற்று கண்டறிந்தது. சோனார் கருவியிலும் ஆழ்கடலில் ஏற்பட்ட சத்தம் பதிவானது. அந்தஇடத்தை நோக்கி மீட்பு குழுவினர்சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனாலும், மாயமான நீர்மூழ்கி தென்படுவதற்கான அறிகுறி எதுவும் நேற்று வரை இல்லை. இன்று காலைக்குள் நீர்மூழ்கியில் ஆக்ஸிஜன் தீர்ந்துவிடும் என்பதால், நீர்மூழ்கியை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.