சென்னை:
“கருணாநிதியின் பேனாவுக்கு கடலில் மட்டுமல்ல.. வேறு எந்த இடத்திலும் சிலை வைக்கக்கூடாது. அவ்வளவு பெரிய எழுத்தாளரா கருணாநிதி?” என்று பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் கேள்வியெழுப்பியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடலில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சிலை வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில், அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த திட்டத்தால் கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
நாம் தமிழர் சீமான் ஒருபடி மேலே போய், கருணாநிதிக்கு பேனா சிலை வைத்தால் அதை உடைப்பேன் எனப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த சூழலில், கருணாநிதிக்கு பேனா சிலை அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் இன்று அனுமதி வழங்கியது. இதையடுத்து, இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், பேனா சிலை விவகாரம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சவுக்கு சங்கர் அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
கருணாநிக்கு பேனா சிலையே வைக்கக் கூடாதுங்க. ஏன் தமிழ்நாட்டில் இவர் மட்டும்தான் பேனா பிடிச்சு எழுத்தினாரா? வேறு யாரும் எழுதலையா? கருணாநிதியை விட சிறந்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். பாரதியாரை விட கருணாநிதி சிறந்த எழுத்தாளரா? பாரதிதாசனை விட இவர் சிறந்த எழுத்தாரா? ஜெயகாந்தனை விட கருணாநிதி சிறப்பாக எழுதி இருக்கிறாரா? அவங்கலாம் என்ன எழுத்தாணியை வெச்சு ஓலைச்சுவடில எழுதுனாங்களா? பேனா புடிச்சு தானே எழுதுனாங்க.. ஏதோ உலகத்துல இவர் மட்டும்தான் பேனா புடிச்சி எழுதின மாதிரி, சிலை வைக்கணும்னா என்ன அர்த்தம் இது? பேனா சிலையே வைக்கக்கூடாதுங்க. அவ்வளவுதான்.
கடலில் வைக்க வேண்டாம். கடற்கரையில் வைக்கலாம். களங்கரை விளக்கத்துக்கு பக்கத்தில் வைக்கலாம்ங்கற பேச்சே இருக்கக்கூடாது. தமிழ்நாட்டில் எங்கேயுமே கருணாநிதிக்கு பேனா சிலை வைக்கக்கூடாது. அப்படி வெச்சா, சீமான் சொல்ற மாதிரி அது உடைக்கப்படும். அவ்வளவுதான். கலைஞர் உங்க அப்பா என்பதால்தானே சிலை வைக்கிறீங்க. ஏன் அறிஞர் அண்ணா எழுதவே இல்லையா? அண்ணா இல்லாமல் திமுக வந்திருக்குமா? அவரோட பேனாவுக்கு சிலை வைக்கணும்னு ஏன் உங்களுக்கு தோணல? இவ்வாறு சவுக்கு சங்கர் கேள்வியெழுப்பினார்.