பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று திருமணமான ஊழியர்களுக்கு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரு சேர கிளப்பியுள்ளது.
சீனாவில் பல வினோதமான சட்டங்கள் இருக்கிறது. மேலும், அங்குள்ள தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சில சமயம் வினோதமான சட்டத்தைக் கொண்டு வருவார்கள்.
அப்படி சீன நிறுவனம் கொண்டு வந்த சட்டம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், மற்றொரு தரப்பினர் இது தனியுரிமை மீறல் என கடும் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
சீனா: இதற்கிடையே சீனாவில் உள்ள ஒரு நிறுவனம், திருமணமான ஊழியர்கள் தங்கள் பார்ட்னர்களை ஏமாற்றுவதைக் கண்டறிந்தால் அவர்களை பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தை மையாகக் கொண்ட இந்த நிறுவனம் ஜூன் 9ஆம் தேதி திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைத் தடை செய்வதாக உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது நிறுவனத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்துமாம்.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “நிறுவனத்தின் கலாச்சாரத்தை வலுப்படுத்தவும், குடும்பத்திற்கு விசுவாசமாக இருப்பதற்கும், கணவன்-மனைவி இடையே அன்பு செலுத்தவும், வேலையில் கவனம் செலுத்துவதற்கும், திருமணமான ஊழியர்கள் திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருப்பதைத் தடை செய்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், கள்ள உறவு கூடாது என அறிவித்துள்ளனர். அவ்வளவு ஏன் விவாகரத்திற்குக் கூட அந்த நிறுவனத்தில் அனுமதி இல்லையாம்.
பணி நீக்கம்: இந்த விதிமுறைகளை மீறும் எந்தவொரு ஊழியரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.. மகிழ்ச்சியான குடும்ப உறவுகள் இருந்தாலே வேலையில் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்பதால் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அங்கே பணிபுரியும் ஊழியர்கள் கூறுகின்றனர்.. இருப்பினும், திடீரென விவாகரத்தைக் கூட அனுமதிக்காத வகையில் இப்படியொரு முடிவை எதற்காக எடுத்துள்ளனர் என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை.
சீன நிறுவனத்தின் இந்த முடிவை ஒரு தரப்பினர் வரவேற்ற அதேநேரத்தில் மற்றொரு தரப்பினர், இது தனியுரிமை சம்பந்தமானது என்றும் தனிப்பட்ட சுதந்திரத்தில் நிறுவனம் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என விமர்சித்தனர்.
எதிர்ப்பு: இது குறித்து ஒருவர் கூறுகையில், “‘திருமணத்தில் பார்ட்னரை ஏமாற்றுவது என்பது அடிக்கடி நடக்கிறது. இதில் அரசு தலையிட வேண்டும். இப்போது ஒரு நிறுவனம் இந்த மோசமான நடத்தைக்கு எதிராகப் போராட முயல்கிறது. இது ஒரு பாசிட்டிவ் முயற்சி. இது நிறுவனத்தில் மரியாதையை அதிகரிக்கவே செய்கிறது. இதைச் சிலர் ஏன் எதிர்க்கிறார்கள் எனப் புரியவில்லை” என்றார்.
இது தனியுரிமைக்கு எதிரானது என்று சொல்லும் வழக்கறிஞர், முறையாக வேலை செய்யாத ஊழியர்களை மட்டுமே நீக்கும் உரிமை நிறுவனங்களுக்கு உள்ளதாகத் தெரிவிக்கிறார். அவர் மேலும் கூறுகையில், “கள்ள உறவுக்குத் தடை விதித்தாலும் அதைக் காரணம் காட்டி எந்தவொரு நிறுவனமும் ஊழியரை பணிநீக்கம் செய்ய முடியாது.
இதைக் காரணமாகச் சொல்லி ஒருவரை பணிநீக்கம் செய்தால் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க முடியும். நல்ல நடவடிக்கைகளை நாம ஊக்குவிக்கலாம். ஆனால், இதைக் காரணமாகக் காட்டி ஊழியர்களின் உரிமைகளை மீற முடியாது” என்றார்.