கொச்சியில் கடற்படை வீரர்களுடன் விமானம் தாங்கி கப்பலில் ராஜ்நாத்சிங் யோகா செய்தார்

கொச்சி,

சர்வதேச யோகா தினத்தையொட்டி, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்றார். அங்கு கடலில் நிறுத்தப்பட்டுள்ள முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தில் யோகா கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதில், ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்தார். கடற்படை வீரர்கள், ‘அக்னிபத்’ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட அக்னி வீரர்கள் ஆகியோர் கப்பலில் வரிசையாக அமர்ந்து யோகா செய்தனர்.

கடற்படை தளபதி ஹரிகுமார், கடற்படை உயர் அதிகாரிகள், ராணுவ அமைச்சக உயர் அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர். ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ராஜ்நாத்சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவது இந்தியாவுக்கு பெருமையான விஷயம். நமது பழமையான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் உலகம் ஏற்றுக்கொண்டதையும், பின்பற்றுவதையும் இது காட்டுகிறது.

ஐ.நா. கூட 9 ஆண்டுகளுக்கு முன்புதான் யோகா தின கொண்டாட்டத்தை அங்கீகரித்தது. ஆனால், உலகின் பல நாடுகளில் பல நூற்றாண்டுகளாக யோகா பின்பற்றப்பட்டு வருகிறது.

வேகமான வாழ்க்கை முறையால், மக்கள் தற்போது உடல்நல பிரச்சினைகளாலும், மனநல பிரச்சினைகளாலும் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்பிரச்சினைகளுக்கு யோகா மட்டுமே உறுதியான தீர்வு.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.