நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்த ஐயப்பன் ஆலயம். இறைவனடி சேர்ந்த சபரிமலை முன்னாள் தந்திரி மகேஷ்வரரு தந்திரியால் கடந்த 1967-ம் ஆண்டு இந்த ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் பக்தர்களால் புனித ஆலயமாகப் போற்றி வணங்கப்படுகிறது.
வெலிங்டன் ஐயப்பன் ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மகா கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டு, சபரிமலை ஐயப்பன் கோயில் தலைமை குருக்கள் கண்டனரு மோகனருக்கு சிறப்பு அழைப்பு விடுத்திருந்தனர். பக்தர்களின் அழைப்பை ஏற்று வருகைத் தந்த சபரிமலை தந்திரி கண்டனரு மோகனரு மகா கும்பாபிஷேகத்தைத் தலைமைதாங்கி நடத்தினார்.
கணபதி ஹோமத்துடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் மந்திரங்கள் முழங்க வேள்விகள் நடைபெற்றன. பாலக்காடு மாங்குரிசி உன்னிமாரார் குழுவினரின் உடுக்கைப் பாட்டும் ஷோபான சங்கீதமும் பக்தர்களை மெய்சிலிர்க்கச் செய்தன. திரளான பக்தர்கள் பங்கேற்ற கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளைக் கோயில் கமிட்டியினர் நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
“சபரிமலை ஐயப்பன் கோயில் பரம்பரை தலைமை தந்திரி வம்சாவளியினர் இரண்டாவது முறையாக வெலிங்டன் ஐயப்பன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகத்தைத் நடத்திக் கொடுத்தது நாங்கள் பெற்ற பாக்கியம்” என உள்ளூர் பக்தர்கள் மனமுருகி வழிபட்டுச் சென்றனர்.