காரைக்குடி: சிபிஐ, அமலாக்கத் துறைக்கு நாடு முழுவதும் சோதனையிட அதிகாரம் உண்டு என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
அவர் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள மித்திரங்குடியில் பிரதமர் கிராமச் சாலைகள் திட்டம் மூலம் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் சாலைப் பணியை பார்வையிட்டார். தொடர்ந்து சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஒன்றியத் தலைவர் சரண்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் வி.கே.சிங் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”68 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 9 ஆண்டுகளில் பிரதமர் மோடி சாதித்துள்ளார். சிபிஐ, அமலாக்கத் துறைக்கு நாடு முழுவதும் சோதனையிட அதிகாரமும், சட்டமும் உள்ளது. அவர்களது விசாரணையில் யாரும் குறுக்கிட முடியாது. மணிப்பூர் விவகாரத்தில் மோடி தலையிட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவசியம் ஏற்பட்டால் அவர் கட்டாயம் தலையிடுவார்” என்று கூறினார்.