சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் பைபாஸ் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அடைப்பு ஏற்பட்டிருந்த 4 ரத்தக் குழாய்களுக்கு பதிலாக 4 செயற்கை ரத்தக் குழாய்கள் பொருத்தி ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்து செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்கு செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவர்கள், அப்போலோ மருத்துவமனையின் மூத்த இதய சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு ஆகியோரும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவர்கள் ஏற்கெனவே முடிவு செய்தபடி, நேற்று அதிகாலை 5.15 மணிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை தொடங்கியது. சுமார் 5 மணி நேரம் நீடித்த சிகிச்சை காலை 10.05 மணி அளவில் முடிந்தது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் இதய அறுவை சிகிச்சை செய்தனர்.
‘அடைப்பு இருந்த 4 ரத்தக் குழாய்களுக்கு பதிலாக 4 செயற்கை ரத்தக் குழாய்களை (பைபாஸ் கிராஃப்ட்) பொருத்தி, புதிய பாதையில் ரத்த ஓட்டம் சீராக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு, அவரது உடல்நிலை சீராக உள்ளது. சிகிச்சைக்கு பிந்தைய இதய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள அவரது உடல் நிலையை இதயம் உள்ளிட்ட பல துறை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்’ என்று மருத்துவமனையின் செயல் இயக்குநர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஒரு வாரம் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார். பின்னர், சில வாரங்களுக்கு அவருக்கு ஓய்வு தேவைப்படும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரிய அறுவை சிகிச்சை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, ‘‘செந்தில் பாலாஜி எவ்வளவு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவு, சாதாரண வார்டு மற்றும் கண்காணிப்பில் இருப்பார் என்பது குறித்து மருத்துவர்கள் தெரிவிப்பார்கள். அவரிடம் இப்போது பேச முடியாது. சுயநினைவு திரும்பியதும் சென்று பார்ப்போம். அவருக்கு நடந்தது பெரிய அறுவை சிகிச்சை” என்றார்.