புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் இருந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்காக செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலாவும், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடைபெற்றது.
மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, “சட்டப்படி கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது தவறான முன்னுதாரணமாகிவிடும். அவரைக் கைது செய்த பிறகே, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு முரணானது” என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து, அதன் பிறகு தானே விசாரணை நடத்தியுள்ளது. உயர் நீதிமன்றம் தனது கருத்தை வெளிப்படுத்துவதில் தவறில்லை. ஒருவேளை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தை தவறாகக் கையாண்டிருந்தால், அதை அரசியல் சாசன விதிப்படி உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும்.
ஆனால், உயர் நீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதுகிறோம், தற்போதைய நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் எந்த முரண்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, ஆட்கொணர்வு மனு மீதான வழக்கில், அமலாக்கத் துறை உரிய வாதங்களை முன்வைக்கலாம்.
ஒருவர் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா? அவரது இதயத்தில் பிரச்சினைகள் இருப்பதாக மருத்துவக் குழு சான்றளித்த பிறகு, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோருகிறீர்களே?” என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், “மருத்துவமனையில் உள்ளபோது, மருத்துவர்கள் தெரிவித்த கருத்தின் அடிப்படையில்தான் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த முடியும். மருத்துவ சிகிச்சை முடிந்த பிறகு, அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாமே? தற்போதைய நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் விசாரணையைத் தொடர்வதுதான் சரியாக இருக்கும்” என்றும் தெரிவித்தனர்.
அதற்கு துஷார் மேத்தா, “இந்த வழக்கு மிகவும் தீவிரமான ஒன்று. தீவிர விசாரணை நடத்த வேண்டியுள்ளது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவால், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை” என்றார்.
அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக மேல்முறையீடு செய்திருப்பது அதிருப்தி அளிக்கிறது. மருத்துவர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தேவைப்பட்டால், மீண்டும் ஒரு மருத்துவக் குழுவை அமைத்து, ஆராயலாமே?” என்றனர்.
தலையிட விரும்பவில்லை…: அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பில், “ஆட்கொணர்வு மனு மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை (இன்று) விசாரணைக்கு வரவுள்ளது. அதன் பிறகு, இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பார்த்த பிறகு, நாங்கள் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கத் தயாராக இருக்கிறோம்.
எனவே, இதில் இப்போதைக்கு தலையிட விரும்பவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை காரணம் காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையைத் தள்ளிவைக்கக் கூடாது. மெரிட் அடிப்படையில் அந்த வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று கூறி, அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்து, விசாரணையை வரும் ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.