சென்னை:
ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தின் அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாக, சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று மாலை பயங்கர தீ விபத்து நேரிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று மாலை வழக்கம் போல சென்னை சென்ட்ரல் இருந்து ரயில் புறப்பட்டது. சென்ட்ரலுக்கு அடுத்த ரயில் நிலையமான பேசின்பிரிட்ஜை தாண்டும் போது ரயிலில் திடீரென தீப்பிடித்தது.
ரயில் இன்ஜினில் இந்த தீ விபத்து நேரிட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர், ரயிலை நிறுத்திவிட்டு கீழே குதித்தார். முதலில் என்ன நடக்கிறது என பயணிகளுக்கு தெரியவில்லை. பின்னர் அதிக அளவில் புகை வருவதை பார்த்த பயணிகள் அடித்து பிடித்து கீழே இறங்கினர். அப்போது ரயில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அவர்கள் பயத்தில் கூச்சலிட்டனர்.
இதையடுத்து, தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், ரயில்வே பணியாளர்களும் உடனடியாக அங்கு வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரயில் பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உயர்மின் அழுத்த கம்பி ரயில் மீது உரசியதில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.