சொல்லி அடிக்கும் 'கில்லி' தளபதி விஜய்
தடை பல கடந்து, தனிப்படை கண்டு, தமிழ் திரையுலகின் “தளபதி”யாய் உயர்ந்து நிற்கும் நடிகர் விஜய்யின் 49வது பிறந்த தினம் இன்று…
தமிழ் திரையுலகின் தலைசிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய், 1974ஆம் ஆண்டு ஜுன் 22 அன்று இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா சந்திரசேகர் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.
1984ல் தனது 10வது வயதில் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த “வெற்றி” என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக வெள்ளித்திரையின் களம் கண்டார்.
தொடர்ந்து “குடும்பம்”, “நான் சிகப்பு மனிதன்”, “வசந்த ராகம்”, “சட்டம் ஒரு விளையாட்டு”, “இது எங்கள் நீதி” என தனது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார்.
1992ல் வெளிவந்த “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு நாயகனாக தமிழ் திரையுலகிற்கு மீண்டும் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரால் அறிமுகப்படுத்தப்பட்டார்.
தொடர்ந்து “செந்தூரப்பாண்டி”, “ரசிகன்”, “தேவா”, “ராஜாவின் பார்வையிலே”, “விஷ்ணு”, “சந்திரலேகா”, “கோயம்புத்தூர் மாப்பிள்ளை” என இவரது படங்கள் வரிசையாக வந்த வண்ணம் இருந்தன.
1996ஆம் ஆண்டு இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில், இவர் நாயகனாக நடித்து வெளிவந்த “பூவே உனக்காக” என்ற திரைப்படம்தான் நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மிகப் பெரிய திருப்பத்தை தந்த படமாக அமைந்தது.
தொடர்ந்து வந்த “துள்ளாத மனமும் துள்ளும்” திரைப்படமும், “காதலுக்கு மரியாதை” திரைப்படமும் நடிகர் விஜய்யை தவிர்க்க முடியாத ஒரு தமிழ் திரை நாயகனாக அடையாளப்படுத்தின.
2003ல் இயக்குநர் கே பாலசந்தரின் 'கவிதாலயா' நிறுவனம் தயாரித்து, அறிமுக இயக்குநர் ரமணா இயக்கிய “திருமலை” என்ற திரைப்படமும் நடிகர் விஜய்க்கு ஒரு திருப்புமுனை திரைப்படமாக அமைந்தது.
இதன் பிறகு வந்த இவரது படங்கள் “கில்லி”, “திருப்பாச்சி”, “சிவகாசி”, “போக்கிரி” என ஏறத்தாழ அதை;து படங்களுமே வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை பெற்று வந்தன.
“3 இடியட்ஸ்” என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ஆக்கமாக வெளிவந்த “நண்பன்” திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக இயக்குநர் ஷங்கருடன் இணைந்தார் நடிகர் விஜய். படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இயக்குநர் ஏஆர் முருகதாஸோடு இணைந்து “துப்பாக்கி”, “கத்தி”, “சர்கார்” என்றும், இயக்குநர் அட்லியுடன் இணைந்து “தெறி”, “மெர்சல்”, “பிகில்” என்றும், தற்போது முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து, “மாஸ்டர்”, “லியோ” என நடிகர் விஜய்யின் திரைப்பயணம் அனைவரையும் வியக்க வைக்கும் வண்ணம் வேகம் எடுத்திருக்கின்றது.
ஒரு திறமையான நடிகர் என்பதையும் தாண்டி, நடிகர் விஜய் ஒரு அற்புதமான பின்னணிப் பாடகர் என்பதை அவர் பாடிய பல பாடல்கள் மூலம் நிரூபித்திருக்கிறார். பாடிய அத்தனை பாடல்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.
நடிகர் அஜீத்தோடு “ராஜாவின் பார்வையிலே” என்ற திரைப்படத்திலும், நடிகர் திலகம் சிவாஜிகணேசனோடு “ஒன்ஸ்மோர்” என்ற திரைப்படத்திலும், நடிகர் விஜயகாந்துடன் “செந்தூரப்பாண்டி” என்ற திரைப்படத்திலும் இணைந்து நடித்திருக்கும் பெருமைக்குரியவராகவும் பார்க்கப்படுபவர்தான் நடிகர் விஜய்.
2009ல் தனது ரசிகர் நற்பணி மன்றத்தை கூட “விஜய் மக்கள் இயக்கம்” என ஒரு சமூக நல அமைப்பாக மாற்றி அமைத்திருக்கும் நடிகர் விஜய் அவர்களின் பிறந்த தினமான இன்று அவரையும், அவரது படைப்புகளும் வெற்றி பெற மனமாற வாழ்த்தி அகம் மகிழ்வோம்.