திண்டுக்கல்,
7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.
லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதிபெறும். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பால்சி திருச்சி மற்றும் லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின . இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற லைகா கோவை கிங்ஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக கங்கா ஸ்ரீதர் , அக்சய் ஸ்ரீனிவாசன் ஆகியோர் களமிறங்கினார். தொடக்கத்தில் , அக்சய் ஸ்ரீனிவாசன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த மணி பாரதி , டேரில் பெராரியோ ஆகியோர் அடுத்தடுத்து ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.இதனால் திருச்சி அணி தடுமாறியது.
மறுபுறம் கங்கா ஸ்ரீதர் நிலைத்து விளையாடினார்.சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த அவர் அரைசதம் அடித்தார். அவர் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் ராஜ்குமார் அதிரடி காட்டினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது திருச்சி . கோவை அணியில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட் , ஷாருக்கான் 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 118 ரன்கள் இலக்குடன் கோவை அணி விளையாடியது.
தொடக்கம் முதல் கோவை அணி அதிரடி காட்டியது. அந்த அணியில் தொடக்க வீரர் சுஜய் சிறப்பாக விளையாடினார். பவுண்டரி , சிக்ஸர்கள் பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.
சுஜய் தொடர்ந்து அதிரடியாக விளையாடி அணியை வெற்றி பெற செய்தார்.18.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து கோவை அணி அபார வெற்றி பெற்றது.
சுஜய் 59 பந்துகளில் 72ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.