டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் துணைமின் நிலையம்: திருவான்மியூரில் ஆய்வு நடத்திய தங்கம் தென்னரசு

சென்னை திருவான்மியூர் மற்றும் தரமணியில் புதிதாக அமையவுள்ள வளிம காப்பு துணை மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

இன்று (21.06.2023) சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் ரூ.92.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழகத்திலேயே முதன்முறையாக, முழுவதுமாகவே டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டு வரும் 230/33 கிலோ வோல்ட் எண்முறை வளிமகாப்பு (Digital Gas Insulated Substation) துணைமின் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நிதி, மின்சாரம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

பின்னர், அமைச்சர் தரமணியில் 708 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400/230/110/33 கிவோ வளிமகாப்பு (Gas Insulated Substation) துணைமின் நிலையமாக தரம் உயர்த்தி மேம்படுத்த நடந்து வரும் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். பின்னர், தற்போது இயங்கி வரும் 230/110/33 கிவோ துணைமின் நிலையத்தினை பார்வையிட்டு செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

திருவான்மியூரில் அமையவுள்ள 230/33 கிவோ துணைமின் நிலையம் மற்றும் தரமணியில் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும் 400/230/110/33 கிவோ துணைமின் நிலையம் மூலம் திருவான்மியூர், தரமணி, பெசன்ட் நகர், காந்திநகர், கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம், வேளச்சேரி மற்றும் பெருங்குடி பகுதிகளிலுள்ள சுமார் நான்கு இலட்சம் மின்நுகர்வோர்களுக்கு தடையற்ற, தரமான மின்சாரம் வழங்க இயலும்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் தொழில்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் அதிவேக வளர்ச்சி பெற்று வருவதால் பெருகி வரும் மின்தேவையைக் கருத்தில் கொண்டு அமைச்சர் தங்கம் தென்னரசு, மேற்படி பணிகளை விரைந்து முடித்து புதிய துணைமின் நிலையங்களை இயக்கத்திற்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) இரா.மணிவண்ணன், இயக்குநர் (திட்டம்) எம்.இராமச்சந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.