தென்காசியில் முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்பு.!
தென்காசி மாவட்டத்தில் உள்ள நடுமாதாகோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது வீட்டில் சந்திரன்-சித்ரா என்ற தம்பதியினர் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு வசித்து வந்தனர். இந்த நிலையில், அந்த வீட்டிலிருந்து இன்று துர்நாற்றம் வீசியுள்ளது.
இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்படி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துர்நாற்றம் வீசிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சித்ரா கட்டிலில் கட்டிவைக்கப்பட்ட நிலையில் முகம் சிதைந்து அழுகிய நிலையில் கிடந்துள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனே தடயவியல் நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். மேலும், போலீஸார் அழுகிய நிலையில் சடலமாக கிடந்த சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே போலீசார் அவரது கணவரான சந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தின் முக்கிய பகுதியில் முகம் சிதைந்து அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.