பாட்னா கூட்டம் | எதிர்க்கட்சிகளின் அணுகுமுறையில் தீவிரமும் உண்மையும் இல்லை: மாயாவதி விமர்சனம்

லக்னோ: பாஜகவுக்கு எதிரான கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை பாட்னாவில் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தங்களது நோக்கத்தில் தீவிரமாக இருப்பதாகத் தெரியவில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதற்கான வியூகம் குறித்து ஆலோசிக்க பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நாட்டின் பல்வேறு முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்ட்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் பங்கேற்க இருக்கிறார்கள்.

எனினும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்க பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி, எதிர்க்கட்சிகளின் அணியில்தான் இல்லை என அவர் கூறி இருக்கிறார். அப்படி இருக்கும்போது ஏன் அவரை அழைக்க வேண்டும் என பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், இது தொடர்பாக மாயாவதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியறிவின்மை, மத வெறி போன்றவற்றால் நாடு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் அரசமைப்புச் சட்டத்தை முறையாகச் செயல்படுத்தும் திறன் காங்கிரஸ் கட்சிக்கோ, பாஜகவுக்கோ கிடையாது. நாடாளுமன்ற பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எழுப்பும் பிரச்னைகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளும் இந்த நேரத்தில், பொது நம்பிக்கையை எவ்வாறு ஏற்படுத்தப் போகிறோம் என்பதை தெளிவுபடுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். முகத்திற்கு முன்பாக புகழ்ந்து பேசுவதும் பின்னர் முதுகில் குத்துவதுமான அரசியல் இன்னும் எவ்வளவுகாலம் நீடிக்கும்?

உத்தரப் பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகள் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகள் தங்கள் அணுகுமுறையில் தீவிரமாகவோ, நோக்கத்தில் உண்மையாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. சரியான முன்னுரிமை இன்றி செயல்பட்டால் நாடாளுமன்றத் தேர்தல், தேவையான மாற்றத்தை கொண்டு வருமா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.