வாஷிங்டன்: அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்ட நிலையில் ‛பாரத் மாதாகீ’ கோஷத்துக்கு நடுவே மனைவி ஜில் பைடனுடன் வந்து ஜோபைடன் கைக்குலுக்கி உற்சாகமாக வரவேற்றார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார். நேராக அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியா வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர். அதன்பிறகு நேற்று பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளரான எலான் மஸ்க்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன்பிறகு சர்வதேச யோகா தினத்தையொட்டி ஐநா தலைமை அலுவலகத்தில் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். 180 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து மோடி யோகா செய்து அசத்தினார். இந்த நிகழ்வு கின்னஸ் சாதனை படைத்தது.
இதையடுத்து பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து வாஷிங்டனுக்கு நேற்று புறப்பட்டு சென்றார். வாஷிங்டனில் பிரதமர் மோடிக்கு அமெரிக்க அரசு சார்பில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் பிரதமர் மோடி தொழிலதிபர்கள், அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பிறகு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோபைடனை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு சென்றார். வெள்ளை மாளிகை சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் உள்ளிட்டவர்கள் கைக்குலுக்கி வரவேற்றனர். இந்த வேளையில் அங்கு இருந்தவர்கள் பாரத் மாதாகீ ஜே என கோஷமிட்டு அதிர வைத்தனர்.
இதையடுத்து அமெரிக்காவின் முக்கிய பிரதிநிதிகளை ஜோபைடன், பிரதமர் மோடிக்கு அறிமுகம் செய்தார். அவர்களும் பிரதமர் மோடிக்கு கைக்குலுக்கினர். இதில் முதல் ஆளாக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க துணை அதிபரான கமலா ஹாரிசுக்கு பிரதமர் மோடி கைக்குலுக்கினார். அதன்பிறகு பிற பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி கைக்குலுக்கி இருந்தார்.
பின்னர் ஜோபைடன், பிரதமர் மோடி ஆகியோர் ஒன்றாக இணைந்து இருநாட்டு உறவுகள் பற்றி பேச உள்ளார். அதன்பிறகு இரவில் பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் ஜோபைடன் சார்பில் டின்னர் விருந்து அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.