பாலிவுட் படமா…. வதந்திகளை நம்ப வேண்டாம் என்கிறார் யஷ்
கேஜிஎப், கேஜிஎப் 2 படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகராகி உள்ளார் கன்னட சினிமாவை சேர்ந்த யஷ். இந்த படங்களுக்கு பின் அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதனால் அவரின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இதற்கிடையே நிலேஷ் திவாரி இயக்கத்தில் ஹிந்தியில் ராமாயணத்தை தழுவி ஒரு படம் உருவாக உள்ளது. இதில் ராவணனாக யஷ் நடிப்பதாக செய்தி பரவியது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் நஞ்சனகூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரா கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் யஷ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛உழைத்து சம்பாதித்த பணத்தை கொடுத்து படம் பார்க்கிறார்கள் ரசிகர்கள். அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அதனால் மிகுந்த அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவது அவசியம். என் மீதான பொறுப்பு அதிகமாகி உள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்கிறேன். என் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். பாலிவுட் தொடர்பான கேள்விக்கு, வதந்திகளை நம்ப வேண்டாம், நான் எங்கும் செல்லவில்லை'' என்றார்.