பிரதமர் மோடி தலைமையில் ஐ.நா. அரங்கில் யோகா – 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு

நியூயார்க்: நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் மோடி அங்கு, வரும் 25-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு என, அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், நியூயார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற 9-வது ஆண்டு சர்வதேச யோகா நிகழ்ச்சியில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அதிபரின் மனைவி ஜில் பைடன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். ஐ.நா. சபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு ஜோ பைடன், ஜில் பைடன், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி வணங்கினர்.

பின்னர் இந்நிகழ்ச்சியில் யோகா வல்லுநர்கள், பயிற்சியாளர்களுடன் இணைந்து பிரதமர் மோடி யோகா பயிற்சி மேற்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: யோகா இந்தியாவில் பிறந்தது. யோகா என்றால் ஒன்றுபடுவது. பல்வேறு நாட்டின் மக்கள் அனைவரையும் இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. ஏறக்குறைய ஒவ்வொரு நாட்டில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். உங்கள் அனைவரையும் யோகா ஒருங்கிணைத்துள்ளது.

யோகாவை பிரபலப்படுத்த கடந்த 2014-ம் ஆண்டிலேயே திட்டமிட்டோம். அதை வெற்றிகரமாக செய்து வருகிறோம். யோகா என்பது வாழ்க்கையின் நெறிமுறை. இந்தியாவின் மற்ற பாரம்பரியம் போலவே, யோகாவும் சக்திவாய்ந்தது. காப்புரிமைகள், பதிப்புரிமை இல்லாதது. உங்கள் வயது, பாலினம், உடல்நிலைக்கு ஏற்றதாக யோகா உள்ளது.

அனைத்து இன, மதங்களுக்கும் பொதுவானது யோகா. இது ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியா அளித்த பரிசு. அமைதியான உலகம், தூய்மையான, பசுமையான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க யோகாவின் சக்தியை பயன்படுத்துவோம். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற இலக்கை நனவாக்க ஒன்றிணைவோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் ஐ.நா. சபைத் தலைவர் கசபா கொரேஷி, ஹாலிவுட் நடிகர்கள் ரிச்சர்ட் கெரே, எரிக் ஆடம்ஸ், கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ், இந்திய உணவுக்கலை நிபுணர் விகாஸ் கன்னா, ஜெய் ஷெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உலக யோகா தினத்தையொட்டி, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: சர்வதேச யோகா தினத்தையொட்டி இந்தியாவின் அழைப்பின் பேரில் 180-க்கும் மேற்பட்டநாடுகள் ஒன்றிணைவது வரலாற்று சிறப்புமிக்கது. 2014-ம் ஆண்டு ஐ.நா. சபையில் யோகா தினத்துக்கான முன்மொழிவு வந்தபோது, ஏராளமான நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியர்கள் புதிய யோசனைகளை வரவேற்று, அவற்றை பாதுகாத்து, நாட்டின் செழுமையான பன்முக தன்மையை கொண்டாடி உள்ளனர். அதுபோன்ற உணர்வுகளை யோகா வலுப்படுத்துவதுடன், உள்நோக்கு பார்வையை விரிவுபடுத்தி, ஒற்றுமை உணர்வுடன் நம்மை இணைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

முதலீடு செய்ய அழைப்பு: இதற்கிடையே, நேற்று காலை அமெரிக்க அரசியல் தலைவர்கள், தொழில்துறை தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், எழுத்தாளர்கள் என வெவ்வேறு துறைகளை சார்ந்த பிரமுகர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

அப்போது இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

விண்வெளி விஞ்ஞானியும், எழுத்தாளருமான நீல் டிகிராஸ் டைசன், நோபல் விருதாளரும் பொருளாதார நிபுணருமான பால் ரோமர், எழுத்தாளர் நிக்கோலஸ் நாசிம் தலீப், தொழிலதிபர் ரே டேலியோ, இசையமைப்பாளர் ஃபல்குனி ஷா, தொழிலதிபர்கள் ஜெஃப் ஸ்மித்,மைக்கேல் ஃபுரோமேன், டேனியல் ரசல், எல்பிரிட்ஜ் கோல்பி, பீட்டர் ஆக்ரே, ஸ்டீபன்கிளாஸ்கோ, சந்திரிகா டாண்டன் உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து உரையாடினார்.

இதைத் தொடர்ந்து, தொழிலதிபரும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வுமான எலான் மஸ்கை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்யுமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.

அறிஞர்கள், தொழிலதிபர்கள், சுகாதாரத் துறை நிபுணர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, உலக பொருளாதார மேம்பாடு, விண்வெளி ஆராய்ச்சி, புத்த மதம், அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு குறித்து ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனரும், தொழிலதிபரும், எழுத்தாளருமான ரே டேலியோ கூறியபோது, ‘‘இந்தியாவில் முதலீடு செய்ய ஏற்ற சூழல் நிலவுவதாகவும், அங்கு முதலீடு செய்ய வருமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்காக அரசு எடுத்துள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்’’ என்றார்.

‘‘கரோனா பெருந்தொற்றால் உலகம் எதிர்கொண்ட பிரச்சினைகள், கரோனாவை கட்டுப்படுத்துவதை வெற்றிகரமாக கையாண்ட முறைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்’’ என்று எழுத்தாளர் நிக்கோலஸ் நாசிம் தலீப் கூறினார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் பால் ரோமர் கூறும்போது, “இந்தியாவின் டிஜிட்டல் பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது. பயோ-மெட்ரிக் அடையாள முறையான ஆதார் திட்டம், டிஜி லாக்கர் திட்டம் வெற்றி அடைந்துள்ளது. இந்த திட்டங்களால் அரசு ஆவணங்களை காகிதம் இல்லாத செயல்முறை மூலம் அடைவது சாத்தியமாகியுள்ளது. இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சிக்காக அரசு எடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் பிரதமர் மோடியுடன் விவாதித்தேன்” என்றார்.

விண்வெளி விஞ்ஞானியும், எழுத்தாளருமான நீல் டிகிராஸ் டைசன் கூறும்போது, “இந்தியாவில் நடைபெற்று வரும் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்கள் குறித்து விவாதித்தோம். இந்தியாவில் இளைஞர்களிடம் அறிவியல் எண்ணத்தை வளர்ப்பதற்காக இந்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை. மேலும் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி பயணங்கள் குறித்தும் நீண்ட நேரம் விவாதித்தோம்” என்றார்.

கிராமி விருது பெற்ற இசையமைப்பாளர் ஃபல்குனி ஷா (எ) ஃபலு ஷா கூறும்போது, “பெருகி வரும் சிறுதானியங்கள் குறித்த எனது பாடல், சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருந்தது என்று எனக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்திய மக்களையும், அமெரிக்க மக்களையும் இந்த பாடல் மூலம் ஒன்றிணைத்து விட்டீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்” என்று உற்சாகத்துடன் கூறினார்.

கின்னஸ் சாதனை: யோகா நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வெள்ளை நிற டி-ஷர்ட், வெள்ளை நிற பேன்ட் அணிந்து வந்திருந்தார். கைகளை கூப்பி, ‘நமஸ்தே’ என்று கூறி தனது பேச்சை பிரதமர் தொடங்கினார்.

ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

அதிக அளவிலான நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றதன் காரணமாக, இந்த நிகழ்ச்சி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.