நாகை: மத்தியில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் வரை ஓயமாட்டோம் என்றும் நாட்டை விட்டே பாஜகவை விரட்டியடிப்போம் எனவும் திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்ற அவர், அங்கு நடைபெற்ற ஒரு விழாவில் பேசும் போது இதனைக் கூறினார்.
மேலும், கருணாநிதியின் மறு உருவமாக செயல்படுவேன் எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின் பாஜகவின் பூச்சாண்டிக்கு திமுகவின் கிளைச் செயலாளர் கூட பயப்படமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக வேண்டுமானால் பாஜகவின் சார்பு அணிகளாக செயல்படும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை கண்டு பயப்படலாம் என்றும் அது திமுகவிடம் எடுபடாது எனவும் மிகவும் உறுதியாக தெரிவித்தார். தேர்தல் வந்துவிட்டாலே போது, பாஜக விசாரணை அமைப்புகளை களமிறக்கிவிட்டு விடும் என விமர்சித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கரை கைது செய்வதை தவிர்ப்பது ஏன் என மத்திய பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பினார். நாளைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறார் என்றும் பாஜக ஆட்சிக்கு முடிவுரை கட்டுவதற்கான தொடக்கமாக இந்த மாநாடு அமையும் எனவும் கூறினார்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிற்கு மிகப்பெரிய கேடு என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், திமுகவினர் ஒவ்வொருவரும் இப்போதே நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.