விஜய்யின் 'லியோ' போஸ்டர் காப்பியா ?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'லியோ'. இன்று(ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தின் முதல் சிங்கிளான 'நா ரெடி' வெளியாக உள்ளது. இதனிடையே, நேற்று நள்ளிரவில் படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
பனிமலை பின்னணியில் விஜய் ஆவேசத்துடன் சுத்தியலால் யாரையோ அடித்துத் தாக்குவது போலவும், பின்னாடி ஓநாய் ஒன்றும் கடும் கோபத்துடன் இருக்க, சுத்தியலிலிருந்து ரத்தம் தெறிக்க, யாரோ ஒருவரது கைவிரல்கள் ஒரு ஓரத்தில் இருக்க, அடி வாங்கிய அந்த யாரோ ஒருவரது இரண்டு பற்கள் பறக்க போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் உள்ள டிசைன், அமெரிக்க வெப் தொடரான 'கேம் ஆப் த்ரோன்ஸ்'–ல் உள்ள ஜான் ஸ்னோ என்ற கதாபாத்திரத்தின் போஸ்டர் டிசைன் போல உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அக்கதாபாத்திரத்தில் கிட் ஹாரிங்டன் என்பவர் நடித்துள்ளார். அந்த போஸ்டரில் கத்தி ஒன்றுடன் அவர் நிற்க, கூடவே ஓநாய் ஒன்றும் இருப்பதால் இந்த ஒப்பீட்டை ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.