கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே 29 வயதான ஒருவர், வெளிநாட்டில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொலையாவட்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகன், ஒரு மகள் என இரட்டைக் குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், இளம்பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் இடவிளாகத்திலுள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார். வெளிநாட்டிலுள்ள கணவர் தன்னுடைய மனைவியிடம், அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் தன்னுடைய உறவினரான 27 வயதான இளைஞரை அழைக்குமாறு கூறியிருந்தாராம். திருமணமாகாத அந்த இளைஞரும், அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று உதவிகள் செய்து வந்தார். இதனால் இளைஞருக்கும், அந்தப் பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, திருமணம் மீறிய உறவாக மாறியது.
இந்த நிலையில் இளம்பெண் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, தொலையாவட்டம் பகுதியிலுள்ள பெற்றோரின் வீட்டுக்குச் சென்றார். அங்கு குழந்தைகளை விட்டுவிட்டு வங்கிக்குச் சென்று வருவதாக கூறிவிட்டுச் சென்றார். அதன் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்ப வரவில்லை. இதுபற்றி அந்தப் பெண்ணின் பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில், போலீஸார் செல்போன் சிக்னல் மூலம் விசாரணை நடத்தினர். அப்போது, மாயமான பெண் கேரளாவில் இருப்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸார் கூறினர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அந்தப் பெண், இளைஞருடன் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்குச் சென்றார். அந்தப் பெண்ணின் பெற்றோரும், இளைஞரின் பெற்றோரும் காவல் நிலையத்துக்கு வந்திருந்தனர். அந்தப் பெண்ணின் பெற்றோர் இரட்டைக் குழந்தைகளையும் அழைத்து கொண்டு காவல் நிலையத்துக்கு வந்திருந்தனர். தங்கள் தாயைக் கண்டதும் இரண்டு குழந்தைகளும் ‘அம்மா…’ என அழைத்துக் கொண்டு பாசத்துடன் அருகே ஓடிச்சென்றன. ஆனால், குழந்தைகளைப் பக்கத்தில் சேர்க்காமல் திரும்பி நின்ற அந்தப் பெண், 27 வயது இளைஞருடன் போவதாக போலீஸிடம் கூறினார். காவல் நிலையத்தில் தாயின் முகத்தைப்பார்த்து அழுதுகொண்டே இருந்த குழந்தைகளைக் கண்டுகொள்ளாமல், அந்த நபருடன் சென்றார்.