தவறுதலாக ஸ்பிரிட் அருந்திவிடும் சம்பவங்கள் குறித்து அடிக்கடி கேள்விப்படுகிறோம். உடல் உறுப்புகள் செயலிழக்கச் செய்யும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலருக்கு உண்டு.
சமீபத்தில், டயாலிசிஸ் சிகிச்சைக்காக 8 வயது சிறுமி ஒருவர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அந்தச் சிறுமி தண்ணீர் கேட்க, அவர் அம்மா அங்கிருந்த ஸ்பிரிட்டை, தண்ணீர் என்று நினைத்து, தவறுதலாகக் குடிக்கக் கொடுத்துள்ளார். அதை அருந்திய சிறுமி, சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உடற்கூராய்வு அறிக்கையில், `சிறுமியின் மரணத்துக்கான காரணம், அவர் ஸ்பிரிட் அருந்தியது அல்ல. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு மற்றும் சிறுநீரக செயலிழப்புதான்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஸ்பிரிட் அருந்துவதால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது குறித்து விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த அவசரகால சிகிச்சை மருத்துவர் சாய் சுரேந்தர்…
“மருத்துவமனைகளில் கைகளைக் கழுவுவதற்கு சானிட்டைசராக ஸ்டெரிலியம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல், பாசிலோல் ஆன்டிசெப்டிக்காக பயன்படுத்தப்படுகிறது. இதே போன்று தான் ஸ்பிரிட்டும். இதை மருத்துவத்தில் ‘சர்ஜிகல் ஸ்பிரிட்’ என்போம். சின்னச்சின்ன கிளினிக் முதல் பெரிய மருத்துவமனைகள் வரை, ஸ்பிரிட்டின் பயன்பாடு உள்ளது. ஊசி போடும் முன் ஸ்பிரிட்டை பயன்படுத்துவர். ஸ்பிரிட் பார்ப்பதற்கு தண்ணீர் மாதிரியே இருக்கும்.
ஆல்கஹாலை எத்தில் ஆல்கஹால், மெத்தில் ஆல்கஹால் என்று வகைப்படுத்தலாம். ஸ்பிரிட்டில் ஆல்கஹால் அளவு அதிகம்.
அதனால்தான் அது மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. மதுபானங்களான பியர், விஸ்கி, பிராந்தி ஆகியவற்றிலும் ஆல்கஹால் இருக்கும். ஆனால் அதன் விழுக்காடு 5-10% மட்டுமே. அதனால் தான் அவற்றை அருந்தும்போது, உடனடி பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஸ்பிரிட்டை பொறுத்தவரை அதில் 80- 90% ஆல்கஹால் உள்ளது.
ஸ்பிரிட் அமிலத்தைப் போன்று தீவிரமானது. உட்கொண்டால், உடல் உறுப்புகளை அரித்துவிடும் தன்மை கொண்டது. வயிறு, சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை அரித்துவிடும். இதனால் ரத்தவாந்தி ஏற்படும். உடலின் எல்லா உறுப்புகளும் செயலிழக்கும். இதனால் மரணம் ஏற்படும் என்பதால் கவனமுடன் இருக்க வேண்டும்” என்றார்.