சத்தீஸ்கர்: Adipurush (ஆதிபுருஷ்) ஆதிபுருஷ் படத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் கோரிக்கை வைத்திருக்கிறார்.
ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த 16ஆம் தேதி வெளியானது ஆதிபுருஷ் படம். பாகுபலி புகழ் பிரபாஸ், பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான்,கீர்த்தி சனோனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதையாகவும் நடிக்க மொத்தம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் படம் வெளியானது.
நெகட்டிவ் விமர்சனம்: ராமாயணத்தை அடிப்படையாக வைத்து படம் உருவாக்கப்பட்ட படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு சென்றன. ஆனால் படம் அவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. கிராஃபிக்ஸ் காட்சிகளோ கார்ட்டூன் காட்சிகள் போல் இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்தனர். ஓரிரு இடங்களில் பின்னணி இசை மட்டுமே ஆறுதல் அளிக்கிறது என்றும் பிரபாஸ் பார்ப்பதற்கு ராமர் போல இயேசுநாதர் போல இருக்கிறார் என கூறி மீம்ஸ்களையும் பதிவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலிலும் டல்: படத்துக்கு கிடைத்த நெகட்டிவ் விமர்சனம் காரணமாக படத்தின் வசூல் மொத்தமாக படுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் ஆதிபுருஷ் ஏழு நாட்கள் முடிவில் மொத்தமாக 410 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக ஆதிபுருஷ் ரசிகர்கள் அப்செட்டாகியுள்ளன. ஒருபக்கம் நெகட்டிவ் விமர்சனம், வசூலில் டல் என ஆதிபுருஷ் அடிவாங்கிக்கொண்டிருக்க மறுபக்கம் படத்துக்கு எதிர்ப்பும் வலுத்துவருகிறது.
வலுக்கும் எதிர்ப்பு: சீதை தொடர்பான வசனம், அனுமன் ராவணன் பற்றி பேசும் வசனம் போன்றவைகளுக்கு எதிர்ப்புகள் எழுந்தன. மேலும் திரைப்பட தொழிலாளர் சங்கமோ படத்தை தடை செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமும் சமீபத்தில் எழுதியது. நேபாளத்திலோ படத்துக்கு தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. ஆதிபுருஷ் படத்துக்கு மட்டுமின்றி அனைத்து இந்தி படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆதிபுருஷ் டீமை 50 டிகிரி செல்சியஸில் எரிக்க வேண்டும் என நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்திருந்தார்.
அமித் ஷாவிடம் கோரிக்கை: இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ராமரின் பக்தர்களும் இந்த மாநில மக்களும் ராமரின் தாய் வீட்டிற்கு வருகை தரும் அமித்ஷாவை வரவேற்கிறோம். அதேநேரத்தில் ராமாயணம் மற்றும் கடவுள்களை கொச்சைப்டுத்தும் ஆதிபுருஷ் படத்தை இன்றே தடை செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேனன்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
முன்னதாக, படத்தில் சில காட்சிகளுக்கும், வசனங்களுக்கும் பூபேஷ் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். மேலும், மத காவலர்கள் என்று கூறிக்கொள்ளும் பாஜக இந்த விஷயத்தில் ஏன் மௌனம் சாதிக்கிறது என்றும் சாடியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது. இதற்கிடையே சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த வருட இறுதிக்குள் நடக்கவிருப்பதால் பரப்புரைக்காக இன்று அமித் ஷா சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரத்துக்கு சென்றார்.
அவர் சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இறங்கிய நேரத்தில் பூபேஷ் இந்த ட்வீட்டை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. துர்க் நகரத்துக்கு செல்வதற்கு முன்பு பத்மஸ்ரீ விருது வென்ற பாண்ட்வானி பாடகி உஷா பார்லே வீட்டுக்கும் ஒரு விசிட் அடித்தார்.