சென்னை: Blue sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) தனது உதவி இயக்குநர்களை மாரி செல்வராஜ் அடிப்பார் என்று சர்ச்சை எழுந்திருக்கும் சூழலில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்திருக்கும் ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இப்போது உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார். படம் ஜூன் 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சர்ச்சையானது. மேலும் அவர் கமல் ஹாசனுக்கு ஏற்கனவே எழுதிய கடிதமும் பேசுபொருளானது.
உதயநிதி: இந்தச் சூழலில் உதயநிதி ஸ்டாலினும், வடிவேலுவும் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் இருவரும் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருப்போம். நாங்கள் அடிக்கும் அரட்டையை பார்த்து எல்லோரும் சிரித்துவிடுவார்கள். இதனால் மாரி செல்வராஜ் ரொம்பவே டென்ஷன் ஆகிவிடுவார். உதவி இயக்குநர்களுக்கு எல்லாம் அடி, திட்டுதான் விழும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
எப்படி அடிக்கலாம்: இந்தப் பேட்டியை பார்த்த பிறகு அடக்குமுறைக்கும், அதிகார திமிருக்கும் எதிராக பேசும் மாரி செல்வராஜ் எப்படி தனது உதவி இயக்குநர்களை அடிக்கலாம் என கூறி அவர் அளித்த பேட்டியை எல்லாம் தோண்டி எடுத்து வெளுக்க தொடங்கினர் நெட்டிசன்ஸ். இதற்கிடையே மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக இருக்கும் வள்ளிநாயகம் என்பவர் மாரி செல்வராஜ் உதவி இயக்குநர்களை அடிப்பதில்லை என்று விளக்கமும் அளித்திருக்கிறார்.
ப்ளூசட்டை மாறன்: இந்நிலையில் இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கும் சூழலில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாரி செல்வராஜை விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார். முதல் ட்வீட்டில் உதயநிதியும், வடிவேலுவும் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியை பகிர்ந்து உதவி இயக்குநர்களை அடித்து வேலை வாங்குகிறாரா மாரி செல்வராஜ் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இரண்டாவது ட்வீட்: இதனையடுத்து மற்றொரு ட்வீட்டில், அடக்குமுறைக்கும் அதிகார திமிருக்கும் எதிராக மாரி செல்வராஜ் ஏற்கனவே அளித்த பேட்டியை பகிர்ந்து என் உதவி இயக்குனர்களை திட்டுகிறேன். அடிக்கிறேன். ஏனெனில் அவர்களால் என்னை திருப்பி அடிக்க இயலாது என்பதால் அதிகாரத்தை செலுத்துகிறேன் என கலாய்த்து பதிவிட்டிருக்கிறார். தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.