புதுடில்லி, மும்பை பயங்கரவாத தாக்குதலில் நேரடி தொடர்புடைய லஷ்கர் பயங்கரவாதி சஜித் மிர்ரை, சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் அறிவிப்பதை தடுக்கும் சீனாவின் முயற்சியை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது.
தாக்குதல்
மஹாராஷ்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 2008 நவ., மாதம் நடத்திய பயங்கர தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்.
பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே, லஷ்கர் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி சஜித் மிர், பல்வேறு உத்தரவுகளை தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தெரிவித்தார்.
இந்த உரையாடலை, மும்பையில் நடந்த ஐ.நா., கூட்டத்தில், மத்திய அரசு கடந்த ஆண்டு பகிரங்கமாக வெளியிட்டது.
அதில், தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ள வெளிநாட்டினரை குறிவைத்து கொல்லும்படி சஜித் உத்தரவுகளை பிறப்பிப்பது தெரியவந்தது.
சஜித் மிர்ரை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. அவரது தலைக்கு அமெரிக்க அரசு 40 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், சஜித் மிர்ரின் சொத்துக்களை முடக்கி, அவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் பரிந்துரையை, இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகள் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்தன.
இந்த பரிந்துரையை முதலில் இடை நிறுத்திய சீனா, தற்போது முழுமையாக தடுத்துள்ளது. சீனாவின் இந்த செயலுக்கு, மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆதரவு
அமெரிக்காவில் உள்ள ஐ.நா., சபையில் பிரதமர் மோடி பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன், இந்த கண்டனத்தை மத்திய அரசு பதிவு செய்துள்ளது.
இதில், ‘பல உறுப்பு நாடுகள் ஆதரவு அளித்த நிலையிலும், பயங்கரவாதியை தடுப்பு பட்டியலில் சேர்க்கும் திட்டம் நிறைவேற்றப்படவில்லை எனில், உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பில் ஏதோ தவறு இருப்பதாக நம்புவதற்கு எங்களுக்கு நியாயமான காரணங்கள் உள்ளன’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்