35-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘கரகாட்டக்காரன்’ குறித்து ராமராஜனிம் பேசிய போது, அதன் நினைவுகள் சிலவற்றை இங்கே பகிர்ந்திருந்தார் அவர். அன்று மாலையே வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பி, அதை அவருக்கு இத்தாலியிலிருந்து அவரின் பேரன் அனுப்பியிருந்ததாகச் சொன்னார்.
அந்த வீடியோவில் வெளிநாட்டில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில், தமிழ்ப் படங்களின் போஸ்டர்கள் சில இடம்பெற்றிருந்தது. அதில் ‘கரகாட்டக்காரன்’ பட போஸ்டரும் இருந்தது. இதுகுறித்து ராமராஜனிடம் பேசினேன்.
”நான் படங்கள் அதிகமா நடிச்சதில்ல. இப்பத்தான் 45வது படத்தை பண்றேன். ஆனா, நான் நடிச்ச படம், கடல் கடந்தும் பேசுறாங்க, கொண்டாடுறாங்கன்னு நினைக்கறப்போ சந்தோஷமா இருக்கு. அந்த சந்தோஷத்தை தான் உங்ககிட்ட இப்ப ஷேர் பண்ணிக்கறேன்.
எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். என் பையன் அருண், இப்ப ஸ்காட்லாந்துல ஆடிட்டரா இருக்கான். உலக அளவில் டீல் பண்ணக்கூடிய பெரிய ஆடிட்டரா இருக்கான். அவன் குடும்பத்தோடு டின்னர் சாப்பிட ஒருமுறை இத்தாலியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் போயிருந்தான். ஹோட்டல்ல தமிழ்ப் பட போஸ்டர்கள் சிலது இருந்தது. அதுல ‘கரகாட்டக்காரன்’ பட போஸ்டர் மட்டும் ஹைலைட்டா வச்சிருந்தாங்க.
என் மகன் ஆச்சரியமாகி அந்த ஹோட்டல் ஓனர்கிட்ட பேசவும், அவர் தமிழ்ல பேசியிருக்கார். அப்புறம் என் பையன் அவரை பத்தி விசாரிச்சிருக்கார். அவர் மதுரை மேலூர், சொக்கம்பட்டினு சொல்ல, என் மகனும் சொக்கம்பட்டினுதான்னு சொல்ல.. ஒரே ஊர்க்காரங்க ரெண்டு பேர் ஒண்ணா சந்திச்ச பூரிப்பாகிடுச்சு. ‘ராமராஜன் மகனா நீங்க.. அப்படியே அப்பா மாதிரியே இருக்கீங்க’னு அவரும் சந்தோஷமாகி, இத்தாலிக்கு வந்த கதையெல்லாம் சொல்லியிருக்கார்.
என் மகன் குடும்பத்தினர் அங்கே சாப்பிட்டதுக்கு காசையும் வாங்கிக்க மாட்டேன்னுட்டார். அந்த ஹோட்டல்ல எடுத்த வீடியோவைத்தான் என் பேரன் எனக்கு அனுப்பி வச்சிருக்கார். பேரன் ஒருமுறை ‘செண்பகமே.. செண்பகமே’ பாடலை பார்த்தில் இருந்து என்னை `Cow தாத்தா’னு தான் செல்லமா கூப்பிடுவார்.
இப்படியொரு வீடியோவைப் பார்த்தும், முதல் வேலையா உங்களுக்கு அனுப்பினதுக்கு காரணம், எண்ணிக்கையில் குறைவான படங்களைத்தான் இதுவரை பண்ணியிருக்கேன். ஆனாலும் நான் நடித்த படங்கள் வெளிநாடு வரைக்கும் பரவ காரணமா, பத்திரிகைகாரங்களை சொல்லலாம். என் வளர்ச்சிக்கு அவங்கதான் முக்கிய காரணமா நினைக்கறேன். இந்த வீடியோவைப் பார்த்ததில் இருந்து சந்தோஷம் அதிகமாகிடுச்சு” என நெகிழ்ந்து மகிழ்ந்தார் ராமராஜன். இன்னொரு தகவல் அவரது மகள் அருணா, எம்.ஏ.பி.எல். முடித்துவிட்டு, தனியார் நிறுவனம் ஒன்றில் சட்ட ஆலோசராக இருக்கிறார்.