Gas cylinder explodes in China, 30 people burn to death | சீனாவில் காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் 30 பேர் உடல் கருகி பலி

யின்சூவான், சீனாவில் ஹோட்டல் ஒன்றில் இருந்த ‘காஸ்’ சிலிண்டர் வெடித்ததில் 30 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் வடமேற்கு நகரமான யின்சூவானில், புகழ்பெற்ற டிராகன் படகுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இதையொட்டி, இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால், ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் திரண்டனர்.

இங்குள்ள ஒரு ஹோட்டலில், நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் உணவு அருந்தி கொண்டிருந்த போது, அங்கிருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறியது.

இதையடுத்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அங்கு இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். புகைமண்டலமாக மாறிய அந்தப் பகுதியில் இருந்த பலர் அலறியடித்தபடி வெளியேறினர்.

இந்த விபத்தில், அங்கிருந்த 30 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயமடைந்த ஏழு பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில், ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சிலிண்டர் வெடித்ததில் ஹோட்டலின் அருகே உள்ள கட்டடங்களும் பலத்த சேதமடைந்தன.

விபத்து குறித்து உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க சீன அதிபர் ஷீ ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தும், காஸ் மற்றும் ரசாயன வெடிப்பு தொடர்பான விபத்துகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.

கடந்த 2015ல் வடக்கு துறைமுக நகரமான தியான்ஜினில் காஸ் பைப் வெடித்த விபத்தில் 173 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.