வெள்ளை மாளிகையில் அளிக்கப்பட்ட இரவு விருந்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, அழகிய சந்தனப் பெட்டியை பிரதமர் மோடி பரிசளித்தார்.
கர்நாடகாவின் மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த சந்தனப் பெட்டி மீது, மலர்கள் மற்றும் விலங்கினங்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
அந்த கலை வேலைப்பாடுகளை, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கைவினை கலைஞர் செய்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன் தன் 80வது பிறந்த நாளை அடுத்த மாதம் கொண்டாட உள்ளார்.
இந்திய பாரம்பரியப்படி, 80 வயது ஆனவர்கள், ‘திரிஷ்ட சஹஸ்ரசந்திரோ’ என அழைக்கப்படுகின்றனர். அதாவது, 80 ஆண்டுகள், 8 மாதங்கள் வாழ்ந்தவர், ஆயிரம் பிறைகள் கண்டவர் என, போற்றப்படுகின்றனர்.
அவர்களது 80வது பிறந்த நாளின் போது, சதாபிஷேக விழா எடுப்பது வழக்கம். இந்த விழாவின் போது, 10 விதமான பொருட்கள் தானமாக வழங்கப்படும்.
தானம் வழங்கும் அந்த 10 பொருட்களின் பட்டியலில், பசு, நிலம், வெள்ளை எள், தங்கம், நெய் அல்லது வெண்ணெய், உணவு தானியங்கள், ஆடைகள், வெல்லம், வெள்ளி, உப்பு ஆகியவை இடம் பெற்று இருக்கும்.
மோடி வழங்கிய சந்தனப் பெட்டிக்குள், தானம் வழங்கும் அந்த 10 பொருட்களும் இடம் பெற்று இருந்தன. அதன் விபரம்:
பசு: கோ தானம் எனப்படும் பசு தானத்திற்கு பதிலாக, வெள்ளி தேங்காய் அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் திறமையான கைவினை கலைஞர்கள் இதை வடிவமைத்துள்ளனர்.
நிலம்: கர்நாடகாவின் மைசூரில் இருந்து மணம் வீசும் சந்தனக் கட்டை, நிலத்திற்குப் பதிலாக வழங்கப்பட்டது.
எள்: தமிழகத்தில் இருந்து வெள்ளை எள் பரிசாக வழங்கப்பட்டது.
தங்கம்: ராஜஸ்தானில் கைவினையாக செய்யப்பட்ட 24 காரட் ஹால்மார்க் தங்க நாணயம் வழங்கப்பட்டது.
வெள்ளி: ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்ட 99.5 சதவீத துாய்மையான ஹால்மார்க் வெள்ளி நாணயம் அளிக்கப்பட்டது.
மேலும், பஞ்சாபில் இருந்து வெண்ணெய், ஜார்க்கண்டில் இருந்து கையால் நெய்யப்பட்ட பட்டு துணி, உத்தரகண்டில் இருந்து அரிசி தானியம், குஜராத்தில் இருந்து உப்பு மற்றும் மஹாராஷ்டிராவில் இருந்து வரவழைக்கப்பட்ட வெல்லம் ஆகியவை அந்த சந்தனப் பெட்டியில் இடம் பெற்று இருந்தன.
மேலும், அதிபர் பைடனுக்கு மிகவும் பிடித்த அயர்லாந்து நாட்டு கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், 1937ல் எழுதிய இந்திய உபநிஷத்களின் ஆங்கில மொழிபெயர்ப்பான, ‘தி டென் பிரின்சிபல் உபநிஷத்ஸ்’ என்ற நுாலின் முதல் பதிப்பையும் பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.
அதோடு, அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 7.5 காரட் பச்சை நிற வைரத்தை மோடி பரிசாக அளித்தார். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை குறிக்கும் விதமாக, 7.5 காரட் எடையில் பரிசு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, 20ம் நுாற்றாண்டு துவக்கத்தில் தயாரிக்கப்பட்ட பழங்கால அமெரிக்க புத்தகம், தொன்மையான அமெரிக்க புகைப்பட கருவி, ‘கோடாக்’ கேமராவில், ஜார்ஜ் ஈஸ்ட்மேன் எடுத்த, காப்புரிமை பெற்ற முதல் புகைப்படத்தின் பிரதி உள்ளிட்டவற்றை, அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் நினைவுப் பரிசாக அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்