தேசிய கைத்தொழில் தினத்தினை முன்னிட்டு கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் கைத்தொழில் கண்காட்சியானது இன்று (22) காலை பத்து மணிக்கு பிரதமரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (21) காலி முகத்திடலில் குறிப்பிட்ட கண்காட்சிக்கான ஆரம்ப நிகழ்வாக 26 உற்பத்தி நிறுவனங்களின் 150க்கும் மேற்பட்ட உள்நாட்டில் கூடியிருந்த வாகனங்களைக் கொண்ட மாபெரும் வாகன அணிவகுப்பு, கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர்; ரமேஷ் பத்திரன தலைமையில் நடைப்பெற்றது.
காலி முகத்திடலில் இருந்து ஆரம்பமாகி புறக்கோட்டை, மருதானை, பொரளை – கனத்த சுற்றுவட்டம் வழியாக பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப வளாகத்தை சென்றடைந்த இந்த வாகன ஊர்வளமானது இலங்கையின் வாகன உற்பத்தித் துறையின் எதிர்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
2021 ஆம் ஆண்டளவில், நாட்டில் வாகனங்களை பொருத்தும் உற்பத்தியாளர்கள் 4 பேர் மட்டுமே ஈடுபட்டிருந்தனர். ஆனால் 2021 ஆம் ஆண்டில் கைத்தொழில் அமைச்சு நிலையான இயக்க நடைமுறைகளை அறிமுகப்படுத்தியதன் பின்னர், வாகனங்களை பொருத்தும் உற்பத்தியாளர்கள் 26 பேர் தங்கள் உற்பத்திகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி, கார்கள், முச்சக்கரவண்டிகள், சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள், ஜீப்கள், கனரக வாகனங்கள்; உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்கள் பொருத்தப்பட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு அனுப்ப முடிந்துள்ளது.
இதன் போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன, தற்போது நாட்டில் பல புதிய உற்பத்தித் தொழில்கள் தோன்றியுள்ளன அவற்றில் மோட்டார் கார்களை பொருத்தும் தொழில் தனித்துவமடைந்துள்ளது. பொருதற் செயற்பாடுகள் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி உள்நாட்டு சந்தைகளுக்கு மட்டுப்படுத்தப்படவில்லை. அத்துடன் நம் நாட்டில் திறந்த சந்தை பொருளாதாரம் இருந்தாலும், முன்னேற்றக்கூடிய தொழில்துறைகளை நாம் அடையாளம் காண வேண்டும். அந்த தொழில்களுக்கு பாதுகாப்புக் கொள்கையை கடைபிடிக்காவிட்டால், எமக்கு கொள்கையளவில் முன்னோக்கிச் செல்வதற்கான எந்தத் திறனும் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.